கோவை சூலூர் விமானப்படை விமான நிலையத்தில் இருந்து வெலிங்டன் ராணுவ தளத்திற்கு சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மரணமடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குன்னூர் அருகே நன்பகல் 12:27 மணிக்கு நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் பயணம் செய்த 14 பேரில் பிபின் ராவத்தும் ஒருவர், இந்த விபத்தில் அவருடன் சென்ற அவரது மனைவி மதுலிக்கா ராவத்தும் மரணமடைந்தார்.
புதிதாக உருவாக்கப்பட்ட முப்படைகளின் தலைமை தளபதி என்ற பதவியை ஏற்றுக்கொண்ட முதல் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி 1, 2020 ல் நாட்டின் தலைமை ராணுவ பொறுப்பை ஏற்ற பிபின் ராவத் 1958 ம் ஆண்டு மார்ச் மாதம் 16ம் தேதி உத்தரகண்ட் மாநிலம் பவுரி-யில் பிறந்தார்.
வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சிக் கல்லூரியில் படித்த பிபின் ராவத் 1978 ம் ஆண்டு 11வது கூர்க்கா ரைபிள் படையில் சேர்ந்து தனது ராணுவப் பணியை துவங்கினார்.
வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் நடைபெற இருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள செல்லும் போது இந்த விபத்து நடந்தது.