சென்னை:

டல்நலமில்லாமல்  ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெற்றபோது, அவர் அனுமதிக்கப்பட்டிருந்த பகுதியில் இருந்த அனைத்து சி.சி.டி.வி கேமராக்களை நிறுத்தி வைத்திருந்தோம் என அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி கூறினார்.

ஜெ.மரணம் குறித்து விசாரணை ஆணையம் விசாரித்து வரும் வேளையில், ஜெ. சிகிச்சை குறித்து சசிகலா தாக்கல் செய்த  பிரம்மான வாக்குமூலம் என பல்வேறு தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அப்பல்லோ குழு தலைவர் பிரதாப் ரெட்டி கூறியதாவது,

தங்களது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை தருவதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டதாக கூறிய அவர், அப்பல்லோ மருத்துவர்களை தவிர வெளி நாட்டிலி ருந்தும் சிறப்பு மருத்துவர்கள் அழைத்து வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறினார்.

சிகிச்சையின்போது,  ஜெயலலிதாவின் உடல்நலம் தேறி வருவதாக நாங்கள் நினைத்தோம். அவரது உடல் நிலை மேலும் முன்னேற்றம் அடைய தேவையான  அத்தனை சிகிச்சைகளையும் அப்பல்லோ மருத்துவர்கள் செய்து வந்ததாகவும், இவ்வாறு பல வாரங்கள் எங்களால் முடிந்த அளவுக்கு சிகிச்சை அளித்து வந்தாகவும் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்கள், ஜெ.வை மருத்துவமனையில் சந்தித்த நபர்கள் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், ஜெயலலிதாவை மருத்துவமனையில்  சந்திக்க குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர் என்றும்,  ஜெ.வை யாரெல்லாம் சந்திக்க வேண்டும் என்பதை ஜெயலலிதா உடன் இருந்த வர்களே முடிவு செய்தனர் என்றும் கூறினார்.

ஜெ.சிகிச்சை குறித்த வீடியோ டிடிவி தினகரன் தரப்பினரால் வெளியானது குறித்த கேள்விக்கு, அப்பல்லோவில், ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும்,  சம்பந்தமில்லாதவர்கள் அவர் சிகிச்சை பெறும் காட்சிகளை  பார்க்க நேரிடும் என்பதால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.

மேலும், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த எல்லா தகவலையும், ஆவணங்களையும் விசாரணை ஆணையத்தில் கொடுத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.