தஞ்சை: திருவாரூரில் நடைபெற்ற நெல்திருவிழாவில் கலந்துகொண்ட தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் 7விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருதுகளை வழங்கினார். அனைத்து பள்ளிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
பள்ளிகளில் பாலியல் தொல்லை தொடர்பான புகார்கள் அதிகரித்து வருவதால், பள்ளி வகுப்பறையில் சிசிடிவி காமிரா பொருத்த நடவடிக்கை எடுக்கும்படியும், அது தொடர்பான நெறிமுறைகளை உருவாக்கும்படியும் மத்தியஅரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் 13 ஆவது தேசிய நெல் திருவிழா இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழா இன்றும் நாளை யும் நடைபெற உள்ளது திருவிழாவானது பாரம்பரிய நெல் ரகங்கள் காலப்போக்கில் அழிந்து விடக் கூடாது என்ற நோக்கத்தில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரால் தொடங்கப்பட்டது. நம்மாழ்வாரின் மறைவிற்குப்பின் இத்திருவிழாவை நெல் ஜெயராமன் அவர்கள் வழிநடத்தினார். கடந்த ஆண்டு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு ஜெயராமன் டிசம்பர் 6-ஆம் தேதி காலமானார். இந்த நிலையில், இந்த ஆண்டும் நெல் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழா தொடங்குவதற்கு முன்பாக நெல் ஜெயராமனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. நாளையும் நடைபெற உள்ள திருவிழாவில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். திருவிழாவில் கலந்து கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் ஏழு விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருதுகளை வழங்கினார்.
முன்னதாக தஞ்சையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஒவ்வொரு பள்ளி யிலும் சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார். தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள திருச்சென்னம் பூண்டியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 24 பயனாளிகளுக்கு குடிநீர், சாலை வசதியுடன் கூடிய இலவச வீட்டு மனை பட்டாவை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். தொடர்ந்து பூதலூர் அரசு மருத்துவமனையில் அன்னை தெரேசா தொண்டு நிறுவனம் சார்பில் 25 லட்சம் ரூபாய் செலவில் அமைத்துக் கொடுத்த ஆக்சிஜன் ஜெனரேட்டர் வசதியை துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “சிறந்த முறையில் கல்வி சேவையில் ஈடுபட்டு வரும், தனியார் மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் கல்வி கட்டண கொள்ளையில் ஈடுபடக்கூடாது நன்கொடை, வளாக கட்டணம் உள்ளிட்டவைகளை வசூலிக்கக் கூடாது. கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஏழை மாணவர்களுக் கான 25சதவீத இலவச கல்வியை பள்ளி நிர்வாகங்கள் நடைமுறைபடுத்த வேண்டும் என்று கூறியதுடன், மாணவர்களின் பாதுகாப்பு கருதி அனைத்துப் பள்ளிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம் என்றும், கடந்த ஆண்டைக் போலவே இந்த ஆண்டும் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்கும் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.