கோவை

ட்டுமானம் முடிந்த பணிகளுக்கு மத்திய அரசு ரூ.1 லட்சம் கோடி தர வேண்டிஉள்ளதாக பில்டர்ஸ் அசோசியேஷன் கூறி உள்ளது.

நேற்று கோவையில் பில்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா என்னும் கட்டுமான சங்கத்தின் தேசிய தலைவர் நரசிம்ம ரெட்டி, மாநில தலைவர் ஐயப்பன், ஒருங்கிணைப்பு தலைவர் விஸ்வநாதன், முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன், தெற்கு மண்டல துணைத் தலைவர் ஜான் பால் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது அவர்கள், ”தற்போது கட்டுமான திட்டங்களுக்கு வனத்துறை, சுற்றுச்சூழல் துறை அனுமதி பெறுவதில் பெரும் சிக்கல் இருந்து வருகிறது.  நாடெங்கும் மாநில நெடுஞ்சாலைகள், மின்சார திட்டங்கள், தொழிற்சாலை திட்டங்கள் என ரூ.15 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் ஒப்புதலுக்காகக் காத்திருக்கின்றன.  ஆகவே, ஒப்பந்ததாரர் நிறுவனங்கள் அனைத்து அதிகாரிகளையும் ஒரே இடத்தில் சந்தித்து அனுமதியைப் பெறும் வகையில் ஒற்றைச்சாளர முறையை பின்பற்ற வேண்டும்.

மத்திய மாநில அரசுகள் நெடுஞ்சாலைகள், விமான நிலைய விரிவாக்கம், தொழிற்சாலைகள் அமைப்பது என பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகின்றன. இத்திட்டங்களுக்கு நிலத்தை எடுப்பதில் ஏற்படும் சிக்கலால் திட்டம் தாமதமாகிறது.  இவற்றில் பெரும்பாலான திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தாமலும், சுற்றுச்சூழல் அனுமதி பெறாமலும் ஒப்பந்தப்புள்ளி விடப்படுகிறது.

திட்டம் செயல்படுத்துவதற்கு முழுமையாக நிலம் கையகப்படுத்திய பின்பும், சுற்றுச்சூழல் அனுமதி பெற்ற பின்பு ஒப்பந்தப்புள்ளி விட வேண்டும். மேலும் கட்டுமான பணிகளுக்கு மிக முக்கியமான பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.. பல்வேறு திட்டப்பணிகள் முடிவுற்ற நிலையிலும் நிதி முழுமையாக வழங்கப்படாமல் உள்ளது.  குறிப்பாக மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில் முடிவுற்ற பணிகளுக்கு ரூ.1 லட்சம் கோடி வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளது. இதனால், ஒப்பந்ததாரர்கள் அடுத்த பணிகளை மேற்கொள்ள முடியாமல் திண்டாடி வருகின்றனர்.” எனக் கூறி உள்ளனர்.