டெல்லி: டெல்லியில்  ஆம்ஆத்மி அரசு பேருந்து கொள்முதலில் ஊழல் நடைபெற்றுள்ளது குறித்து சிபிஐ விசாரிக்கு மாநில ஆளுநர் உத்தரவிட்டு உள்ளார். ஆனால், நடக்காத முறைகேடு பற்றி சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டுள்ளதாக ஆம்ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது.

டெல்லி மாநில ஆம்ஆத்மி அரசு மீது பாஜக பல்வேறு புகார்கள் கூறி வருகிறது. ஏற்கனவே டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக அம்மாநில துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்பட 15 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், அதில் நடைபெற்றிருக்கும் பண மோசடி குறித்து விசாரிக்க அமலாக்கத்துறை தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இந்த நிலையில், ஆம்ஆத்மி அரசு வாங்கிய புதிய பேருந்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாக பாஜக கொடுத்த புகாரின்பேரில், சிபிஐ விசாரிக்க ஆளுநர் வினய்குமார் சக்சேனா உத்தரவிட்டு உள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டு டெல்லி அரசு ஆயிரம் தாழ்தள பேருந்துகளை வாங்கியது. இதில்,  முறைகேடு நடந்ததாக பாஜ புகார் அளித்தது. இது பற்றி விளக்கம் அளிக்கும்படி, டெல்லி தலைமை செயலாளருக்கு ஆளுநர் சக்சேனா அனுப்பியிருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள மாநில தலைமை செயலாளர் , டெண்டர் விவகாரத்தில் முறைகேடு நடந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக ெதரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, இந்த முறைகேடு பற்றி சிபிஐ விசாரிக்க ஆளுநர் சக்சேனா நேற்று ஒப்புதல் வழங்கினார். ஆனால், ‘இந்த பேருந்துகளின் கொள்முதல் நடக்கவே இல்லை. இதற்காக எந்த நிறுவனத்துக்கும் பணமும் கொடுக்கப்படவில்லை,’ என்று கூறியுள்ள ஆம் ஆத்மி, நடக்காத முறைகேடு பற்றி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு இருப்பதாக ஆளுநரை கண்டித்துள்ளது.