திருவாரூர்:

நீட்  ஆள்மாறாட்ட முறைகேடுகள் தொடர்பான புகார்களை  சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

நாடு முழுவதும் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் மாணவர்களை சேர்ப்பதற்காக நடத்தப்பட்ட ‘நீட் தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தமிழகத்தில் இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு உள்ளது, மாணவர்களிடையே கடும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கை தேனி மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். முறைகேடு தொடர்பாக   சென்னையைச் சேர்ந்த மாணவர் உதித்சூர்யா மற்றும் அவரது தந்தை மருத்துவர் வெங்கடேசன், மாணவர் பிரவீன், அவரது தந்தை சரவணன்; மாணவர் ராகுல், அவரது தந்தை ஜெகதீஷ், மாணவர் இர்பான், அவரது தந்தை முகம்மது சபி ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.மாணவி அபிராமி மற்றும் அவரது தந்தை மாதவன் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.

இந்தநிலையில், ‘நீட் தேர்வு முறைகேட்டில் மேலும் 25 மாணவர்கள் தொடர்பு இருப்பதாக சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, நீட் தேர்வு ஹால்டிக்கெட் உள்பட அனைத்து விதமான சோதனைகளை மீண்டும் நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நீட் தேர்வு முறைகேடு தொடர்பான சி.பி.ஐ. விசாரித்து உண்மையை வெளிக் கொணர வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்த  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் , நீட் தேர்வு ஆள்மாறாட்ட முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிபிசிஐடி போலீஸ் விசாரித்தால் உண்மை வெளிவராது என்று கருத்து தெரிவித்துள்ள அவர், இந்த முறைகேடு வேறு மாநிலங்களுக்கும் நீள்வதால் சிபிஐ-யே விசாரிக்க வேண்டும் என்றும், நீட் தேர்வை அடியோடு ஒழிக்க வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.