நெல்லை:

நெல்லை மாவட்டம் கடையம் அருகே தம்பதியரை தாக்கி கொள்ளையடிக்க முயன்றது தொடர்பான வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக  நெல்லை எஸ்.பி. தெரிவித்து உள்ளார்.

கடந்த ஆகஸ்டு மாதம் நெல்லை மாவட்டம் கடையம் பகுதியை சேர்ந்த வயதான விவசாய தம்பதிகளான சண்முகவேல், செந்தாமரை இரவு தனது வீட்டின் முன்பு தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த கொள்ளையர்கள் அவர்களை அரிவாளைக் கொண்டு மிரட்டிய நிலையில், தம்பதிகள் இருவரும் சேர்ந்து அந்த கொள்ளையர்களை அருகில் இருந்து நாற்காலி, பக்கெட் போன்ற பொருட்களைக் கொண்டு அடித்து விரட்டினர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

வயதான நிலையிலும் கொள்ளையர்களை விரட்டியடித்த அவர்களின் வீர தீர செயலை பாராட்டி தமிழக அரசு விருது வழங்கி கவுரவித்தது.

இவர்களிடம் கொள்ளையடிக்க முயற்சித்த நபர்களை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில், 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக மாவட்ட எஸ்.பி. அருண் சக்திகுமார்  தெரிவித்து உள்ளார்.

50 நாட்களுக்கு மேலாக நடந்த விசாரணைக்கு பின், கொள்ளை முயற்சியில் தொடர்புடைய முக்கிய நபரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். ரகசிய இடத்தில் வைத்து அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் மற்றொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர்களிடம் இருந்து  35 கிராம் தங்க தாலி செயின், 2 அரிவாள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும், மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றும்  தெரிவித்து உள்ளார்.