சென்னை,

டிடிவி தினகரன் ஆதரவாளர்கள்  பணப்பட்டுவாடா உறுதி செய்யப்பட்டது காரணமாக சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது தேர்தல் ஆணையம்.

இதுகுறித்த வருமான வரித்துறை சோதனையின்போது கிடைக்கப்பெற்றுள்ள ஆதாரங்களில்,  வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் பட்டியலில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பெயர் இடம்பெற்றுள்ளது. ஆகவே, அவர்கள்மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

 

ஜனநாயக முறைப்படி நியாயமான தேர்தல் நடைபெற வேண்டுமென்றால் இடைத் தேர்தலின் போது பண விநியோகத்திற்கும், தேர்தல் முறைகேடுகளுக்கும், தேர்தலை தள்ளி வைக்க வேண்டிய சூழ்நிலைக்கும் காரணமாக இருந்த அனைத்து போலீஸ் அதிகாரிகள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேர்தல் பார்வையாளர்கள், சிறப்பு பார்வையாளர்கள், இவ்வளவு பறக்கும் படைகள் இருந்தும் பண விநியோகம் தங்கு தடையின்றி நடந்தது எப்படி என்பது பற்றி தீவிர விசாரணை நடத்தி அதற்கு துணை போனவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக வருமான வரித்துறை சோதனையில் சிக்கியுள்ள “வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் பட்டியலில்” இடம்பெற்றுள்ள அமைச்சர்கள், முதல்-அமைச்சர் ஆகியோர் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்ய தேர்தல் ஆணையமே நடவடிக்கை மேற்கொண்டு, இனி எந்தக் காலத்திலும் தமிழக இடைத்தேர்தலில் மட்டுமல்ல- பொதுத் தேர்தல்களிலும் தேர்தல் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க ஆக்கபூர்வமான நடவடிக்கையே எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.