மதுரை: மதுரை மீனாட்சிஅம்மனை தரிசித்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  கோடநாடு வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும், மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை என்றும் தெரிவித்தார்.

மறைந்த தமிழ்நாடு முதல்வர்  “ஜெயலலிதாவின் முகாம் அலுவலகமாகவும், ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய இடமாகவும் இருந்து வந்த கோடநாடு எஸ்டேட்டில், அவரது மறைவுக்கு  பிறகு 2017, ஏப்ரல் 24ஆம் தேதியன்று  கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இதில், அங்கிருந்த காவல்காரர்  ஓம்பகதூர் என்பவர் கொலை செய்யப்பட்ட நிலையில், மற்றொரு காவலாளியான  கிருஷ்ணபகதூர் என்பவர் கடுமையாக காயப்படுத்தப்பட்டார். இதன் தொடர்ச்சியாக, இந்த விவகாரத்தில் சந்தேகிக்கப்பட்ட ஜெயலலிதா வின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் மற்றும் கோடநாடு பங்களாவில் சி.சி.டி.வி. மற்றும் கணினி உள்ளிட்ட பொறுப்புகளை நிர்வகித்து வந்த தினேஷ் என்கிற இளைஞர், இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர்களை ஏற்பாடு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட சயான் என்பவரது மனைவி, மகள், மேலும் இந்தக் குற்றம் நிகழ்ந்த காலத்தில் கொடநாடு சரக காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருந்தவர் உள்ளிட்ட பலரது சந்தேக மரணங்கள், மர்ம விபத்துகள் தொடர்ச்சியாக நடைபெற்று, மொத்தமாக 6 உயிர்கள்  பலியாகி உள்ளன.

இதுதொடர்பாக கடந்த அதிமுக ஆட்சியில் விசாரணை நடைபெற்று முடிவடைந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், திமுக அரசு, இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது.  இதுதொடர்பாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டு கடந்த இரு ஆண்டுகளாக பல்வேறு கட்டங்களாக விசாரணை நடைபெற்று வருகிறது. கொடநாடு கொலை, கொள்ளையில் ஈடுபட்டதாக, கைது செய்யப்பட்டு பிணையில் வெளியே வந்திருக்கும் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்களை அவர்களது வசிப்பிடங்களுக்கே சென்று கலந்துரையாடியதில் இந்த வழக்கை நீர்த்துப் போகச் செய்ய ஒருவர் தங்களிடம் வந்து பேரம் பேசியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. மேலும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக அரசு, இந்த வழக்கை விசாரித்து வருவதாகவும், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியை முடக்க, திட்டமிட்டு காய்கள் நகர்த்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. இதுதொடர்பாக திமுக அரசு அவ்வப்போது எடப்பாடியை சீண்டி வருகிறது.

இந்த நிலையில், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி,  கோடநாடு விவகாரத்தை மட்டும் மையமாக வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுவது ஏன்? என கேள்வி எழுப்பியதுடன்,  கோடநாடு வழக்கை ஏன் சிபிஐ விசாரிக்க கூடாது? என கூறியதுடன், இதுதொடர்பாக  சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பிய போது பதிலளிக்காதது ஏன்? என்றும்,  கோடநாடு வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக திமுகவினர் வாதாடுகின்றனர் என்று குற்றம் சாட்டினார்.

மேலும், நாட்டில் எத்தனையோ சம்பவங்கள் நடந்தாலும் கோடநாடு சம்பவத்தை மட்டும் திட்டமிட்டு பேசுகின்றனர் என்றவர்,  இந்த வழக்கின்  90 சதவீத வழக்கு விசாரணை முடிந்த நிலையில் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றியது ஏன்? கோடநாடு சம்பவ வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,  கோடநாடு வழக்கில் குற்றவாளியை கண்டுபிடித்தது அதிமுக. அந்த குற்றவாளிக்கு ஆதரவாக இருந்தது திமுக என்று கூறினார்.

தொடர்ந்து பேசியவர், காவிரி விவகாரத்தில் தொடர்ந்து 22 நாட்கள் நாடாளுமன்ற கூட்டத்தொடரை அதிமுக முடக்கியது, ஆனால் தற்போதைய திமுக அரசு கையாலாகத்தனமாக இருந்து வருகிறது என்றவர், செய்தியாளர்களின் கூட்டணி குறித்த கேள்விக்கு,  பாஜக என்ன தீண்டத்தகாத கட்சியா? என்று எதிர்க்கேள்வி எழுப்பியவர்,  திமுக கூட பாஜகவுடன் கூட்டணி அமைத்ததே? அதை ஏன் கேட்கவில்லை என்றார்.

தமிழகத்தின் பிரச்சனைக்காக மத்திய அரசிடம் அதிமுக எப்போதும் எடுத்துரைக்கும் என்றவர்,  அதிமுக ஊழல் பற்றி பைல்ஸ் வெளியிடப்படும் என்று பாஜக மாவட்டத்தலைவர் கூறியிருக்கிறாரே என்ற கேள்விக்கு,   “யார் வேண்டுமானாலும் எங்களுக்கு எதிராக என்ன பைல்ஸ் வேண்டுமானாலும் வெளியிடட்டும். எங்களுக்கு மடியில் கனமில்லை; வழியில் பயமில்லை” என்றார்.