மதுரை: மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார்  திருட்டு வழக்கு என காவல்துறையினரால் அடித்து கொலை செய்யப்பட்ட  வழக்கில் சிபிஐ அதிர்ச்சி தகவல்களை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில் அஜித்குமார் மீது கொடுக்கப்பட்ட புகார் போலியாது என்றும், காவல்துறையினரால் தாக்கியதால்தான் அஜித்குமார் உயிரிழந்தார் என்றும் பரபரப்பு தகவல்களை தெரிவித்து உள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவில் காவலாளியாக பணிபுரிந்தவர் அஜித்குமார். இந்த கோவிலுக்கு வந்த பேராசிரியர் நிகிதா  என்பவர்,  தமது நகைகளை காணவில்லை என கொடுத்த புகாரின் அடிப்படையில் அஜித்குமாரை போலீசார் விசாரித்தனர். இந்த விசாரணை யில் கொடூரமாக தாக்கப்பட்டு அஜித்குமார் மரணமடைந்தார்.

தமிழகத்தையே உலுக்கிய இந்த கொடூர காவல்நிலைய மரணம் தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை விசாரணையில் நம்பிக்கை இல்லை என்பதால், சிபிஐ விசாரணைக்கு கோரப்பட்டது. இதையடுத்து நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்தது. அதன்படி, வழக்கை  சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் அஜித்குமாரை அடித்து கொலை செய்ததது   10 போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கு  சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் கைது செய்யப்பட்டுள்ள  ‘கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன் ஆகிய 5 போலீசாரின் ஜாமின் மனு மீதான விசாரணை   உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி முன்பாக பிப்ரவரி 4ந்தேதி அன்ற  விசாரணைக்கு வந்தது.

அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகைதீன் பாஷா, அஜித்குமார் அடித்து கொல்லப்பட்ட சம்பவத்தில் 10 போலீசாருக்குமே தொடர்பு உள்ளது. ஆகையால் 10 போலீசாருக்கும் ஜாமீன் தரக் கூடாது” என கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்த விசாரணையின் போது, “அஜித்குமார் மீதான நகை திருட்டு புகார் உண்மைதானா?” என நீதிபதி ஸ்ரீமதி கேள்வி எழுப்பினார்.

இதற்கு சிபிஐ தரப்பில், “நகை திருட்டு புகாருக்கு முகாந்திரம் எதுவுமே இல்லை. அதனாலேயே நகை திருட்டு புகார் என்பது முடித்தும் வைக்கப்பட்டுவிட்டது” என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, “ஒன்றுமே இல்லாத விஷயத்துக்காக ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளாரே” என நீதிபதி ஸ்ரீமதி வேதனை தெரிவித்தார்.

அத்துடன், ”இந்த கொலைக்கு காரணமான புகார்தாரர் (பேராசிரியர் நிகிதா) மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே?” என்று கூறிய நீதிபதி ஸ்ரீமதி, இருதரப்புக்கும் முன்விரோதம் ஏதும் இருந்ததா? எனவும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு சிபிஐ தரப்பில், அஜித்குமார் மற்றும் நிகிதா தரப்புக்கு இடையே எந்த முன்விரோதமும் இல்லை. நகை திருடு போய்விட்டதாக புகார் கொடுக்கப்பட்டது; இதற்காகவே மானாமதுரை டிஎஸ்பி விசாரணை நடத்த உத்தரவிட்டார். அந்த விசாரணையில்தான் அஜித்குமார் கொல்லப்பட்டார்” எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்தப் புகார் தொடர்பான ஆவணங்களை நீதிபதி ஸ்ரீமதி கேட்டார். அதற்கு, இது தொடர்பாக விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய இருப்பதாக சிபிஐ வழக்கறிஞர் முகைதீன் பாஷா கூறினார்.

இதையடுத்து  வழக்கின் விசாரணை வரும் 16-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

[youtube-feed feed=1]