கொல்கத்தா: நிலக்கரி கடத்தல் வழக்கு தொடர்பாக மேற்கு வங்க சட்டத்துறை அமைச்சர் மலாய் கட்டக் வீடு மற்றும் அவருக்கு  தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். நிலக்கரி கடத்தல் வழக்கில் கொல்கத்தாவில் 5 இடங்களிலும், அசன்சோலில் ஒரு இடத்திலும் சோதனை நடந்து வருகிறது.

மேற்கு வங்கத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு ஏற்கனவே ஆசிரியர் பணி நியமனம் தொடர்பான குற்றச்சாட்டில், அமைச்சர் மற்றும் அவரது உதவியாளர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.40கோடி அளவிலான பணம் மற்றும் ஏராளமான நகைகள் கைப்பற்றப்பட்டன.

அதுபோல,  சட்டவிரோதமாக நிலக்கரி வெட்டி எடுத்தது தொடர்பாக பல கோடிஊழல் நடந்தது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இதில் மம்தாவின் மருமகன் அபிசேக் பானர்ஜி மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், அனுப் மஜி எனும் லாலா மற்றும் பினாய் மிஸ்ரா ஆகிய இரு முக்கிய சதிகாரர்கள் குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது. அனுப் லாலா இந்த வழக்கில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ருஜிரா பானர்ஜி என்பவரிடம் லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இந்த ருஜிரா பானர்ஜி அபிஷேக் பானர்ஜி என்பவரின் மனைவி ஆவார். அ

பிஷேக் பானர்ஜியும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் உறவினர்கள். திரிணாமுல் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராவார். இந்த வழக்கில் கடந்த பிபரவரி மாதம் அதாவது மேற்கு வங்க சட்டசபை தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் ருஜிரா பானர்ஜிக்கு சிபிஐ சம்மன் அனுப்பி இருந்தது. இதேபோல் ருஜிராவின் சகோதரி மேனகா காம்பிருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ருஜிரா பானர்ஜி மற்றும் அவரது சகோதரியிடம் சி.பி.ஐ விசாரணையும் நடத்தியது. மேலும்,  நிலக்கரி கடத்தல் வழக்கில் ஐபிஎஸ் அதிகாரிகளான ஞானவந்த் சிங், கோட்டேஸ்வர ராவ், செல்வமுருகன், ஷியாம் சிங், ராஜீவ் மிஸ்ரா, சுகேஷ் குமார் ஜெயின் மற்றும் ததாகதா பாசு ஆகியோர் உட்பட 7 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கை அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது, மேற்கு வங்க மாநில சட்ட அமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மோலோய் கட்டக்கின் அசன்சோலில் உள்ள வீட்டில் சிபிஐ சோதனை நடத்தியது. மேலும், அவருக்கு நெருக்கமான இடங்களிலும் சோதனை நடத்தி வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.