டெல்லி: டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வீட்டில் இன்று அதிகாலை முதல் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் தலைநகரில் 21 இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக சிபிஐ தகவல் தெரிவித்து உள்ளது. இது தலைநகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு துணை முதல்வராக மனிஷ் சிசோடியா செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், மனிஷ் சிசோடியா வீட்டில் இன்று காலை முதல் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
டெல்லி மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்குவதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக பதியப்பட்ட வழக்கில் மனிஷ் சிசோடியாவின் வீடு உள்பட 21 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சிசோடியா கடந்த 15ந்தேதி சுதந்திர தினத்தன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, பிரதமரின் சுதந்திரன தின உரையை விமர்சித்து, “கெஜ்ரிவால் மாதிரி” உள்ளவர்களால் மட்டுமே இது சாத்தியம் என்றும், மத்திய அரசு அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அளித்த வரைபடத்தில் ஒத்துழைத்தால் மட்டுமே இது சாத்தியமாகும் கூறினார். பள்ளிகளில் படிக்கும் அனைத்துக் குழந்தைகளும் உயர்தரக் கல்வியைப் பெறுவதோடு, அனைத்து இந்தியர்களும் இலவச மற்றும் சிறந்த சுகாதார சேவைகளைப் பெறும்போதுதான் நாடு வளர்ச்சியடைந்ததாகக் கருதப்படும் என்றும், “குழந்தைகளுக்கு இலவச உலகத்தரம் வாய்ந்த கல்வி, சிறந்த சுகாதார சேவைகள் மற்றும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் மட்டுமே நாட்டை மேம்படுத்த முடியும். கெஜ்ரிவால் வழங்கிய திட்டத்தை பின்பற்றினால் மட்டுமே நாடு வளர்ச்சியடையும்” என்று சிசோடியா கூறினார்.
இந்த நிலையில், அவரது வீடு, அலுவலகம் உள்பட 21 இடங்களில் சிபிஐ ரெய்டு நடத்தி வருகிறது.
இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள சிசோடியா, சிபிஐ வந்துள்ளது. லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு எதிர்காலத்தை உருவாக்கும் நாங்கள் நேர்மையானவர்கள். நல்ல செயல்கள் செய்பவர்களுக்கு இது போன்ற தொல்லைகள் கொடுக்கப்படுவது இந்த நாட்டில் துரதிர்ஷ்டவசமானது. இதனால் தான் நமது நாடு இன்னும் நம்பர் 1 நாடாக மாறவில்லை என சாடியுள்ளார்.