மதுரை:
காவல்துறையினரின் தாக்குதலால் உயிரிழந்த சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கில. சிபிஐ தரப்பில் தாக்கல் செய்த பதில் மனு திருப்தி அளிக்கவில்லை என உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிருப்தி தெரிவித்து உள்ளது.

சாத்தான்குளம் வணிகர்களான ஜெயராஜ்-பென்னிக்ஸ் கொரோனா ஊரடங்கு சமயத்தில், அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலாக கடையை திறந்து வைத்திருந்ததால், காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அடித்தே கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கை சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
இரட்டைக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர் முருகன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், “சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறேன். சம்பவம் நிகழ்ந்த அன்று இரவு 8.15 மணியளவிலேயே காவல் நிலையம் வந்தேன். அப்போது ஜெயராஜ் பென்னிக்ஸ் மீதான புகாரில் கையெழுத்திடுமாறு உதவி காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் கட்டாயபடுத்தியதால், நானும் கையெழுத்திட்டேன். அதைத்தவிர வேறு எந்த செயலிலும் நான் ஈடுபடவில்லை. மேலும், வழக்கு தொடர்பான ஆவணங்களை ஏற்கனவே தடய அறிவியல் துறை அதிகாரிகள் சேகரித்துவிட்ட நிலையில் விசாரணையும் முடிவடைந்துள்ளது. ஏற்கனவே வழக்கில் ஜாமீன் கோரி மதுரை மாவட்ட முதன்மை நீதித்துறை நடுவரிடம் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கில் ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, “சிபிஐ சம்பந்தமான வழக்குகளில் மாவட்ட நீதிமன்றத்தில் எப்படி ஜாமீன் கோரி தாக்கல் செய்ய இயலும் என்று மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பினர். அதைத்தொடர்ந்து சிபிஐ தாக்கல் செய்த பதில் மனு குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், சிபிஐ முழு விசாரணை ஆவணங்களையும் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் கூறி, வழக்கு விசாரணை ஆகஸ்டு 25ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
Patrikai.com official YouTube Channel