நூறே பிரதிக்கு 65 லட்ச ரூபாய் விளம்பம்  சிபிஐ நோண்டும் பத்திரிகை வில்லங்கம்..

பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் வி.ஐ.பி.க்களை மிரட்டும் கும்பல் பற்றி அவ்வப்போது படித்துள்ளோம்.

இங்கே நாம் பார்க்கப்போவது, மத்திய அரசை ஏமாற்றி 2 தினசரி பத்திரிகைகள் விளம்பரம் வாங்கி குவித்த ஒரு விவகாரம்.

மத்திய அரசுக்குச் சொந்தமான விளம்பரத் துறை இயக்குநரகம் ( DAVP) பத்திரிகைகளுக்கு, அதன் விற்பனையின் அடிப்படையில் விளம்பரம் கொடுக்கும். ஆனால் 2  பத்திரிகைகள், தங்கள் விற்பனை குறித்து போலியான தகவல்களை அளித்துக் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை 65 லட்சம் ரூபாய்க்கு மத்திய அரசின் விளம்பரத்தைப் பெற்றுள்ளது.

இந்த மோசடிக்கு விளம்பரத்துறையில் பணியாற்றும் சில ஊழியர்களும் உடந்தையாக இருந்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சி.பி.ஐ. ஒரே நேரத்தில்  150 இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது.

அதில் இந்த இரண்டு பத்திரிகைகளின் அச்சகங்களும் அடங்கும்.

அந்த இரு பத்திரிகைகளும் 100 முதல் 200 பிரதிகள் மட்டுமே அச்சடிப்பது,அந்த சோதனையில் கண்டு பிடிக்கப்பட்டது.

ஆனால்   பல மடங்கு விற்பனையைக் காட்டி  3 ஆண்டுகளில் 65 லட்சம் ரூபாய்க்கு விளம்பரம் பெற்றிருப்பதும் அந்த சோதனையில் தெரிய வந்தது.

இது தொடர்பாக,  சி.பி.ஐ. விசாரணை தொடங்கியுள்ளதாக டெல்லியில் நேற்று அதிகாரிகள் கூறினர்.

மோசடிக்குப் பூர்வாங்க ஆதாரம் கிடைத்ததும், இரு பத்திரிகைகள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

சி.பி.ஐ.விசாரணைக்கு ஆளான தினசரிகள் எவை என்பது தெரியவில்லை.

-பா.பாரதி.

[youtube-feed feed=1]