பாலசோர்

டிசா ரயில் விபத்துக்கு சதிவேலை காரணமா என்னும் கோணத்தில் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

கடந்த 2ஆம் தேதி அன்று மேற்கு வங்க மாநிலம் ஷாலிமார் ரயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹானா ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. அதே வழியாக வந்த பெங்களூரு யஷ்வந்த்பூர் – ஹவுரா ரயிலும், தண்டவாளத்தில் விழுந்து கிடந்த ரயில் பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

ரயில்வே அமைச்சர் அஸ்வ்னி வைஷ்ணவ் எலெக்ட்ரானிக் இன்டர்லாக்கிங்’ முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதுவே விபத்துக்கு காரணம். இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அடையாளம் காணப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

பொதுவாக ரயில் தண்டவாளத்தில் ரயில்வே கேட், சிக்னல்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பாயின்ட் இயந்திரங்கள் பொருத்தப்பட்டு இவை கட்டுப்பாட்டு அறைகளின் பேனல்களுடன் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ஒட்டுமொத்த கட்டமைப்பு இன்டர்லாக்கிங் என்று அழைக்கப்படுகிறது.  விபத்தின் போது வெளியில் இருந்து மாற்றம் செய்யப்பட்டதாகவும், இதன் பின்னணியில் சதி இருப்பதாகவும் சந்தேகம் எழுந்துள்ளது.

ரயில் விபத்து குறித்து சிபிஐ விசாரணைக்கு ஒடிசா மாநில அரசு மற்றும் ரயில்வே அமைச்சகம் பரிந்துரை செய்தது. அதை ஏற்று பல்வேறு பிரிவுகளின்கீழ் சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. நேற்று காலை 10 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழு, ஒடிசா மாநிலத்தில் விபத்து நடந்த பகுதியில் நேற்று காலை ஆய்வை தொடங்கினர்.  ஒடிசா விபத்து மனித தவற்றால் நடந்ததா, சதி வேலை காரணமா என்பது உட்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

இதுவரையிலான 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிகப்பெரிய ரயில் விபத்து நடந்ததன் பின்னணியில் ‘இன்டர்லாக்கிங்’ முறை மாற்றப்பட்டது காரணமா என்பது குறித்து சிபிஐ அதிகாரிகள் முதல்கட்ட விசாரணையை தொடங்கினர். விபத்து தொடர்பான ஆவணங்களை ரயில்வே அமைச்சகத்திடம் இருந்து சிபிஐ அதிகாரிகள் பெற்றுள்ளனர்.

விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள், ரயில்வே ஊழியர்கள், மீட்பு படையினர், உள்ளூர் அதிகாரிகள், விபத்தை நேரில் பார்த்தவர்கள் என பல்வேறு தரப்பினரையும் சிபிஐ அதிகாரிகள் சந்தித்து தகவல்களை திரட்டி வருகின்றனர். அவர்களுடன் மத்திய தடய அறிவியல் ஆய்வகத்தின் நிபுணர்களும் விபத்து நடந்த பகுதியில் இருந்து பல்வேறு தடயங்களை சேகரித்தனர்.

விபத்தில் பலத்த காயங்களுடன் உயிர் தப்பிய ரயில் ஓட்டுநர் குணாநிதி மொகந்தி, அவரது உதவியாளர் இருவரும், ‘‘பச்சை சிக்னல் கிடைத்ததால்தான் ரயிலைத் தொடர்ந்து இயக்கினோம்’’ என்று தெரிவித்துள்ளனர். எனவே ‘இன்டர்லாக்கிங்’ முறையில் மாற்றம் நிகழ வாய்ப்பே இல்லை. மெயின் லைன் தண்டவாளத்தில் செல்ல வேண்டிய ரயில், எப்படி லூப் லைனுக்கு மாறியது என்ற கேள்வி எழுந்துள்ளது.

இத்தகைய சூழ்நிலையில், வெளியில் இருந்து ‘இன்டர்லாக்கிங்’ முறையில் மாற்றம் செய்யப்பட்டிருந்தால் மட்டுமே மெயின் லைனில் இருந்து லூப் லைனுக்கு ரயில் மாறியிருக்கும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் ‘இன்டர்லாக்கிங்’ முறையில் மாற்றம் எப்படி நிகழ்ந்தது என்று தெரியவில்லை என்பதால் சதி வேலை இருக்கலாம் என்று சிபிஐ அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இதற்காக ரயில்வேயில் பின்பற்றப்படும் தொழில்நுட்ப செயல்பாடுகள் பற்றி ரயில்வே நிபுணர்களின் கருத்துகளை அறிய சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.