2019 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் தொடரின் போது சூதாட்டம் நடந்ததாக எழுந்த புகாரை மத்திய புலனாய்வுப் பிரிவான சிபிஐ விசாரித்து வந்தது.

ஐபிஎல் சூதாட்ட மோசடி 2010ம் ஆண்டு முதல் இயங்கி வந்ததாகவும் மற்றொன்று 2013ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்ததாகவும் சிபிஐ தெரிவித்திருந்தது.

இது தொடர்பாக ராஜஸ்தானைச் சேர்ந்த சஜ்ஜன் சிங், பிரபு லால் மீனா, ராம் அவதார் மீனா மற்றும் அமித் குமார் ஷர்மா, ஹைதராபாத்தைச் சேர்ந்த குர்ரம் சதீஷ் மற்றும் குர்ரம் வாசு மற்றும் டெல்லியைச் சேர்ந்த திலீப் குமார் உள்ளிட்ட எட்டு பேர் மீது 2022 மே மாதம் சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் “வங்கி அதிகாரிகளுடன் சேர்ந்து போலி அடையாள அட்டைகள் மற்றும் ஆவணங்களைப் பயன்படுத்தி” வங்கிக் கணக்குகளைத் திறந்ததாகக் கூறப்பட்டது.

“பந்தய நடவடிக்கைகளுக்காக இந்தியாவில் பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட பணத்தின் ஒரு பகுதி, ஹவாலா நெட்வொர்க்குகளைப் பயன்படுத்தி வெளிநாடுகளில் உள்ள அவர்களது கூட்டாளிகளுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டதாக” கூறி சிபிஐ விசாரணையை துவங்கியது.

இந்த நிலையில் வழக்கு தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் விசாரணைக்குப் போதுமான ஆதாரங்கள் இல்லாததால் விசாரணையை கைவிடுவதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்த அவர்களது கூட்டாளி ‘வக்காஸ் மாலிக்’ உடன் பாகிஸ்தான் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டிருந்ததாக சிபிஐ ஏற்கனவே குற்றம்சாட்டி இருந்த நிலையில் தற்போது இந்த வழக்கு கைவிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.