சென்னை: சென்னை பாரிமுனை பகுதியில் அமைந்துள்ள போர்ட் டிரஸ்ட் எனப்படும் சென்னை  துறைமுக பொறுப்பு கழகத்துக்கு சொந்தமான முதலீட்டிலிருந்து 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்து பணம் எடுத்ததாக, 9 பேரை  சிபிஐ கைது செய்துள்ளது. இந்த அதிர்ச்சி அளிக்கும் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

சென்னை துறைமுக பொறுப்புக் கழகம் (chennai PORT TRUST) மூலம் கோயம்பேட்டில் உள்ள இந்தியன் வங்கிக் கிளையில் ரூ. 500 கோடி ரூபாய் நிரந்தர வைப்புத் தொகையாக செலுத்தப்பட்டது. ஆனால் அடுத்த 3 நாளில் அந்த பணத்தில் இருந்து சுமார் ரூ.100 கோடியை, தலா ரூ.50 கோடி என இரு வேறு வங்கி கணக்குகளுக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.  பின்னர், ஒரு வங்கியில் செலுத்தப்பட்ட ரூ.50 கோடியை, பிரித்து, 28 பேரின் வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. இது வங்கி அதிகாரிகளிடையே சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து ரகசிய புகார் கொடுக்கப்பட்டது. பின்னர இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

அதைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணை மற்றும் அதிரடி ரெய்டுகள் மூலம்  மோசடியை உறுதி செய்த சிபிஐ, அது தொடர்பாக 9 பேர் கைது செய்துள்ளனர். விசாரணையில்,   துறைமுக பொறுப்பு கழகத்தின் துணை இயக்குனர் என அறிமுகம் செய்து கொண்ட நபர், போலி ஆவணங்களுடன் ரூ.500 கோடி  வைப்பு நிதியிலிருந்து 100 கோடியை மாற்றி இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும்,  50 கோடியை 28 வங்கி கணக்குகளுக்கு மாற்றம் செய்தபோது, தரகர் மணிமொழி என்பவருடன் சேர்ந்து வங்கி பணத்தை மாற்றியதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

ஒரு வருடத்திற்கும் மேலான முழுமையான விசாரணைக்குப் பிறகு, சிபிஐ திங்கள்கிழமை இரவு 9 பேரை கைது செய்துள்ளது.  இந்த மோசடியில் நெல்லை மாவட்டத்தைச்சேர்ந்த சுடலைமுத்து என்பவர் ஈடுபட்டிருந்தும் கண்டுபிடிக்கப்பட்டது. அவனை சமீபத்தில் திருநெல்வேலியில் கைது செய்த சிபிஐ, மேலும் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர். இந்த மாபெரும் மோசடியில்,  துறைமுக அதிகாரிகள் மற்றும் வங்கி அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. துறைமுக நிர்வாக அதிகாரிகளுக்கு தெரியாமல், பணத்தை எப்படி மாற்ற முடியும் என்று கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது.

கைது செய்யப்பட்ட 9 பேர்கள் விவரம்:

கணேஷ் நடராஜன், வி.மணிமொழி, ஜே.செல்வகுமார், கே.ஜாகிர் உசேன், எம்.விஜய் ஹெரால்ட், எம் ராஜேஷ் சிங், எஸ் சியாத், எஸ். அப்சர் மற்றும் வி. சுடலைமுத்து.