
திருவாரூர் :
கடந்த 7ந்தேதி காவிரி உரிமை மீட்பு பயணத்தை தொடங்கிய திமுக செயல்தலைவர் ஸ்டாலின், இன்று 4வது நாளாக திருவாரூரில் திமுக தலைவர் கருணாநிதிக்கு சொந்தமான வீட்டில் இருந்து தனது போராட்டத்தை தொடங்கினார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் காவிரி உரிமை மீட்பு நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த பயணம் இன்று 4வது நாளாக தொடர்கிறது.
கடந்த 7ம் தேதி முதல் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் திருச்சி முக்கொம்பில் இருந்து காவிரி உரிமைகள் மீட்பு நடைபயணத்தை தொடங்கியுள்ளார். நேற்று 3வது நாளாக தஞ்சை அம்மாபேட்டையில் இருந்து தனது போராட்டத்தை தொடங்கிய அவர், இன்று 4வது நாளாக திருவாரூரில் இருந்து தொடங்கியுள்ளார்.
திருவாரூரில் சன்னதி தெருவில் உள்ள, திமுக தலைவர் கருணாநிதி இல்லத்தில் இருந்து 4ம் நாள் பயணத்தை தொடங்கிய மு.க.ஸ்டாலின் கீழவீதி, மேலவீதி, தெற்குவீதி வழியாக பவித்திர மாணிக்கம் சென்றார்.
இன்றைய பயணத்தில் குளிக்கரையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே மு.க.ஸ்டாலின் உரையாற்ற உள்ளார்.
இந்த நடைபயணம் பவித்ரமாணிக்கம், கூத்தாநல்லூர், மன்னார்குடி, கோட்டூர், குழிக்கரை வழியாக திருத்துறைப்பூண்டியை நடைபயணம் சென்றடைய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நடைபயணத்தின் போது அந்த பகுதி பொதுமக்களையும் ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார்.
அதைத்தொடர்ந்து இன்று மாலை திருத்துறைப்பூண்டியில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருத்துறைப்பூண்டி கூட்டத்தை முடித்துக் கொண்டு ஸ்டாலின் நாகப்பட்டினம் செல்ல உள்ளார்.
[youtube-feed feed=1]