டெல்லி: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஆகஸ்டு 31-ஆம் தேதி கூடுகிறது. இந்த கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க கர்நாடக அரசு வலியுறுத்தி வருகிறது.
டெல்லியில் வருகின்ற 31-ம் தேதி காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஹல்தர் தலைமையில் நடைபெறுகிறது. டெல்லியில் நடைபெறும் காவிரி ஆணைய கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், புதுவை அதிகாரிகள் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்ட முயற்சி எடுத்துவரும் கர்நாடக அரசு, அதற்காக மத்தியஅரசை வலியுறுத்தி வருகிறது. தற்போது டெல்லியில் முகாமிட்டுள்ள கர்நாடக முதல்வர் பசவராஜ் பொன்மை, மத்திய நீர் வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து பேசினார். தொடர்ந்து, நதி நீர் பங்கீடு பிரச்னை பற்றி சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் கர்நாடக பவனில் செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக முதல்வர், அண்டை மாநிலங்களுடான நதி நீர் பிரச்னைகளை உச்ச நீதிமன்றத்தில் எதிர்கொள்வது பற்றி சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்தேன். மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவின் நிலையை உச்ச நீதிமன்றம் ஏற்கும் என்ற நம்பிக்கை உள்ளது
.தமிழத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள நீர் திட்டங்கள், சட்ட விரோதமானவை. இது பற்றி உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகா சார்பில் மனு தாக்கல் செய்யப்படும். மத்திய அரசிடமும் இந்த விவகாரம் பற்றி பேசுவோம் என்று கூறியவர், காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் குறித்து பேசப்படும் என்றும் கூறினார்.