சென்னை: கே.டி.ராகவனின் ஆபாச வீடியோவை அண்ணாமலைதான் வெளியிட சொன்னார்  என யுடியூபர் மதன் ரவிச்சந்திரன் ஆடியோ வெளியிட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக பா.ஜ.கவில் மாநிலப்பொதுச் செயலாளராகப் பொறுப்பு வகித்த கே.டி.ராகவன்  தொடர்பான ஆபாச வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் பா.ஜ.க நிர்வாகி கே.டி.ராகவன் பெண் ஒருவருடன் செல்போனில் வீடீயோ காலில் பேசி அநாகரிகமான செயல்களில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

இந்த வீடியோவை மாநில பாஜக தலைவர் அண்ணாமலையின் அனுமதியின் பேரிலேயே  வெளியிட்டதாக  பிரபல யுடியூபர் மதன்கவுரி கூறியிருந்தார். இவரும் பாஜக ஆதரவாளர் மற்றும் உறுப்பினர். வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, அவர்  பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அவரது யுடியூபும் முடக்கப்பட்டது.

இந்த நிலையில், யூடியூபர் மதன் ரவிச்சந்திரன் தற்போது ஒரு ஆடியோ வெளியிட்டுள்ளார். பாஜக மாநிலதலைவர்  அண்ணாமலை தங்களிடம் பேசியதாக சில ஆடியோக்களையும் வெளியிட்டுள்ளார் மதன் ரவிச்சந்திரன். அதில்,  கே.டி.ராகவன் தொடர்பாக, அண்ணாமலையை சந்தித்து, இப்படி ஒரு பாலியல் வீடியோ இருப்பதாகவும், எனவே கட்சிக்குள் யாருக்கும் தெரியாமல், அதை விசாரணை நடத்தவேண்டும் என்று தான் வற்புறுத்தியதாகவும், ஆனால், அண்ணாமலைதான், நமது கட்சிக்கார பெண்ணுக்கு நீதி தேவை; வீடியோவை வெளியிடுங்கள் என்று கூறியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

வீடியோவை வெளியிட்டபிறகு பாதுகாப்பாக இருந்து கொள்ளுங்கள் என்றும், நான் உங்கள் பக்கம் எப்போதும் நிற்பேன் என்றும் அண்ணாமலை கூறியதாகவும் அந்த ஆடியோவில் பதிவாகியுள்ளது.

மேலும், “பல பெண்களின் பெரிய பிரச்சனைகளுக்கு அண்ணாமலை காரணமாக இருக்கப்போகிறார். கே.டி.ராகவனின் வீடியோவை அண்ணாமலைதான் வெளியிட சொன்னார் என்பதற்கான ஆடியோ ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. இதை அவர் மறுத்தால் வீடியோவும் வெளியிடப்படும்” என மதன் தெரிவித்துள்ளார்.

மதன் ரவிச்சந்திரனின் இந்த ஆடியோ பா.ஜ.க வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.