சென்னை: உச்சநீதிமன்ற நீதிபதியாகும் உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ்-க்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் பிரிவு உபசார விழா நடைபெற உள்ளது.

உச்சநீதிமன்றத்துக்கு 3 பெண் நீதிபதிகள் உள்பட 9 பேர் நீபதிகளாக கொலிஜியம் பரிந்துரைத்தது. இதை மத்தியஅரசு ஏற்று, குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பியது. அதற்குகுடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து மத்தியஅரசு நியமன உத்தரவு வழங்கியுள்ளது.  இந்த பட்டியலில் சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் இடம் பெற்றுள்ளார்.

இதையடுத்து நீதிபதி எம்.எம்.சுந்தரேஷை (வயது 59)  உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, அவருக்கு தலைமைநீதிபதி மற்றும் சக நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் சங்கநிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

தலைமையில் இன்று மாலை உயர் நீதிமன்றத்தில்,  தலைமைநீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையில் நீதிபதி சுந்தரேஷ்க்கு பிரிவு உபசார விழா நடைபெறவுள்ளது.

நீதிபதி சுந்தரேஷ். தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டதைச் சேர்ந்தவர். ஈரோட்டில் கடந்த 1962 ஜூலை 21-ம் தேதி பிறந்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், கடந்த 2009-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவரது தந்தை முத்துசாமி மூத்தவழக்கறிஞர். தாயார் புவனேஸ்வரி. இவரது மனைவி சுபாவும்,மகன் முத்துச்சரணும் வழக்கறிஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது மகன் தற்போது உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி விட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகத் தொழில்புரிந்து வருகிறார். இவரது மகள் நித்திலா மருத்துவம் படித்து வருகிறார்.