டெல்லி: நாளை மறுதினம் (23ந்தேதி) நடைபெற இருந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையத் தின் 16-வது கூட்டம்  ஜூன் 17ந்தேதி கூடும் என முதலில் அறிவிக்கப்பட்டது. இதில் மேகதாது அணை குறித்து விவாதிக்க வேண்டும் என கர்நாடக அரசு வலியுறுத்தி வந்தது. இது சர்ச்சையானது. கர்நாடகஅரசின் நடவடிக்கைக்கு தமிழகஅரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதை யடுத்து, அந்த கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்த ஆணைய தலைவர் ஹல்தர்,  வரும் 23ந்தேதி நடைபெறும் என்றும், அன்றைய தினம் மேகதாது அணை குறித்து விவாதிக்கப்படும் என்று அறிவித்தார். தொடர்ந்து, அதிகாரிகளுடன் தமிழ்நாடு வருகை தந்து, மேட்டூர், கல்லணை உள்பட டெல்டா பகுதிகளில் ஆய்வு செய்தார். இதையடுத்து மேகதாது அணை குறித்தும் பேசி சர்ச்சையை அதிகப்படுத்தினார்.
இதையடுத்து, தமிகஅரசு சார்பில் அனைத்து கட்சி குழுவினர் இன்று டெல்லி செல்வதாக  அறிவிக்கப்பட்டது. இவர்கள் நாளை மத்திய அமைச்சர்களை சந்தித்து மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இதுகுறித்து ஆணையத்தில் விவாதிக்கக்கூடாது என வலியுறுத்தவும் உள்ளனர்.
இந்த  நிலையில், ஜூன் 23-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு,  ஜூலை 6ஆம் தேதி அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.