சென்னை:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சியினர் இன்றும் சென்னையில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் முன்பு திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடுப்பு வைத்து தடுத்து நிறுத்தினர். இதன் காரணமாக இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது.
திமுக, காங்கிரஸ் உள்பட கூட்டணி கட்சியினரின் போராட்டம் இன்று 4-வது நாளாக நடைபெற்று வருகிறது.
சென்னை, தாம்பரம் பேருந்து நிலையம் அருகே திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் போராட்டம் நடத்தினர்.
ஆதம்பாக்கத்தில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் கைது செய்யப்பட்டார்.
கோயம்பேட்டில் மெட்ரோ ரயிலை திமுக உள்ளிட்ட கட்சியினர் மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதன் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும், ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் திமுக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் காரணமாக 5 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது.