தூத்துக்குடி:

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடைபெற்று வரும் மக்கள் போராட்டம் இன்று 52வது நாளை எட்டியுள்ளது.

இன்றைய போராட்டத்தில் பொதுமக்களுக்கு ஆதரவாக மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சியினர் களமிறங்கினர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் ஏராளமான கம்யூனிஸ்டு கட்சி தொண்டர்கள் அப்பகுதி மக்களுடன் இணைந்து ஆலை  முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையால், கேன்சர், மூச்சுத்திணறல் உள்பட பல நோய்கள் பரவி வருவதும், அதன் காரணமாக ஏராளமான பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருவதும் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் ஆலையை மேலும் விரிவாக்க சிப்காட் நிர்வாகம் அனுமதி அளித்து உள்ளது. இந்நிலையில, ஆலையை மூடக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த அ.குமரெட்டிபுரம் கிராம மக்கள் 53வது நாளாக  போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த போராட்டத்துக்கு  பொதுமக்கள் மட்டுமின்றி பள்ளி, கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ள னர். மேலும் போராட்டத்துக்கு ஆதரவாக வெளிநாட்டு தமிழர்களும் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில், ஸ்டெர்லைட் ஆலை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநிலக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் ஸ்டெர்லைட் ஆலையின் வாயிலின் முன்பு போராடினர்.

இந்த போராட்டத்திற்கு தூத்துக்குடி மாவட்ட செயலாளர் அர்ஜூனன் தலைமை தாங்கினார். இதில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் கனகராஜ், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் முத்து மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

தூத்துக்குடி வீரபாகு மகளிர் கல்லூரி மாணவிகளும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதன் காரணமாக ஆலை பகுதியில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.