சென்னை:

காவிரி விவகாரத்தில் உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, திமுக மற்றும் கூட்டணி கட்சியினர், மத்திய மாநில அரசுக்கு எதிராக இன்று 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை உள்பட மாநிலம் முழுவதும் பல இடங்களில் திமுக உள்பட கூட்டணி கட்சியினர் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அப்போது, மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷமிட்டனர். இதன் காரணமாக பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சென்னை ஓட்டேரியில் திமுக கூட்டணி கட்சியினர் சார்பில் நூற்றுக்கணக்கானோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு திமுக மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான  சேகர்பாபு தலைமை தாங்கினார். இதன் காரணமாக அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து சேகர் பாபு உள்பட கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

அதுபோல, சென்னை மடிப்பாக்கம் கூட்ரோட்டில் மா.சுப்ரமணியன் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

சைதாப்பேட்டை அருகே உள்ள அரங்கநாதன் சுரங்கபாலம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்ட தலைநகரங்களிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலையில் முன்னாள் அமைச்சர் எ.வ வேலு தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது.

கோவை விமான நிலையம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற திமுகவினர் கைதாகினர்.