சென்னை,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்திருப்பதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி 
காவிரிப் பிரச்சினை குறித்து உச்ச நீதி மன்றம் 30-9-2016 பிறப்பித்த உத்தரவில், “வருகின்ற 4-ந் தேதிக்குள் மத்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களும் காவிரி மேலாண்மை வாரியத்தில் பங்கேற்க தங்கள் தரப்பில் பரிந்துரைக்கும் நிபுணர்களின் பெயர்களை இன்று பிற்பகல் 4 மணிக்குள் மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும்.
karunanithi
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டதும், அதன் உறுப்பினர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் சென்று உண்மை நிலவரத்தைக் கண்டறிந்து உச்ச நீதி மன்றத்துக்கு 6-ந்தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்“ என்று மிகத் தெளிவாகவும், திட்டவட்டமாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்றைய தினம் (3-ந்தேதி) மத்திய அரசின் சார்பில் உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க முடியாது என்றும், இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு வாரியத்தை அமைக்க உத்தரவிட முடியாது என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு செப்டம்பர் 20 மற்றும் 30-ந்தேதிகளில் உச்ச நீதி மன்றம் பிறப்பித்த உத்தரவில் திருத்தம் செய்ய வேண்டுமென்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அப்போது குறுக்கிட்டு நீதிபதிகள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கடந்த வாரம் மத்திய அரசு ஒப்புக் கொண்டது ஏன் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். அதற்கு மத்திய அரசு சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், “அப்போது தவறு இழைத்து விட்டோம்“ என்று கூறியிருக்கிறார்.
“மங்கை சூதகமானால் கங்கையில் மூழ்கலாம்; ஆனால் கங்கையே சூதகமானால் எங்கே மூழ்குவது?” என்பதைப் போல மத்திய அரசின் செயல்பாடுகள் உள்ளது.
மேலும் மத்தியில் ஆட்சியில் இருப்போர் விரைவில் கர்நாடக மாநிலத்தில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலை மனதிலே கொண்டு, இந்தத் திடீர் முடிவினை, நடுநிலைமை தவறி, முழுக்க முழுக்க கர்நாடகாவின் குரலை எதிரொலிக்கும் ஊது குழலாக செயல்பட்டுள்ளது, மிகவும் கண்டிக்கத்தக்க ஒன்றாகும்.
தமிழ்நாட்டில் பா.ஜ.க. எப்படியும் காலூன்ற முடியாத நிலையில், கர்நாடகத்திலாவது வரக் கூடிய தேர்தலில் இந்த முடிவின் மூலம் வெற்றி பெற்று விட முடியுமா என்று மனப்பால் குடித்துக் கொண்டு செயல் படும் மத்திய பா.ஜ.க. அரசு, இந்திய நாட்டின் நீதி பரிபாலன முறைகளையே சிறுமைப்படுத்தும் வகையிலும், மொத்தத் தமிழ்மக்களை வஞ்சித்திடும் முறையிலும் செயல்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்தத் திடீர் முடிவினை தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் விவசாயச் சங்கத் தலைவர்களும் எதிர்த்திருக்கிறார்கள்.
மத்திய அரசில் உள்ள கர்நாடக பா.ஜ.க. அமைச்சர்கள் எல்லாம் இதுவரை தெரிவித்து வந்த கருத்தைத் தான் மத்திய அரசு சார்பில் உச்ச நீதி மன்றத்தில் எதிரொலித்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் மத்திய அரசின் முடிவையும், கர்நாடக அரசின் முடிவையும் தமிழகத்திலே உள்ள அனைவரும் ஒன்றாக இணைந்து எதிர்க்க முன் வர வேண்டும் என்றும்; நெருக்கடியான இந்த நிலையிலாவது தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும், தமிழகச் சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி விவாதிக்க வேண்டும் என்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.