தஞ்சாவூர்:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சியினர் இன்று 3 வது நாளாக தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தஞ்சையில் நடைபெற்ற போராட்டத்தின்போது,  அங்கிருந்த எல்ஐசி அலுவலகம் மீது கல்வீசி  தாக்குதல் நடைபெற்றது. இதன் காரணமாக போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு மோதலாக மாறியது. இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன் தலைமையில் தி.மு.க. மற்றும் தோழமைக் கட்சியினர் 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது,  தஞ்சை காந்திஜி சாலையில் உள்ள எல்.ஐ.சி. கோட்ட அலுவலகம் முன்பு,  போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் எல்.ஐ.சி. அலுவலகம் மீது கற்களை வீசித் தாக்கினர்.

இதை தடுக்க முயன்ற போலீகாரர் மீது, போராட்டக்காரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு பதற்றமான சூழல் உருவானது.

இதைப்பார்த்த  தி.மு.க. மூத்த நிர்வாகிகள், திமுக தொண்டர்களை சமரசம் செய்து, அங்கிருந்து அழைத்து சென்றனர். இதன் காரணமாக மோதல் தடுக்கப்பட்டது.