பெங்களூரு: மேகதாதுவில் அணை கட்ட காவிரி மேலாண்மை ஆணையம் அனுமதி வழங்கும் என கர்நாடக முதல்வர் பசவராட்ஜ பொம்மை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

காவிரி நீர் தொடர்பாக உச்சநீதி மன்ற உத்தரவின்படி, மத்தியஅரசு தாக்கல் செய்திருந்த திருத்தப்பட்ட காவிரி வரைவு திட்டத்தை ஏற்று, கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் 18ந்தேதி உச்சநீதி மன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கியது. அதையடுத்து, காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு, காவிரி நீர் வழங்கப்படுவது குறித்து விவாதித்து உத்தரவிடப்பட்டு வருகிறது.

அதன்படி, இந்த மாதம் 27ந்தேதி காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், மேகதாது அணை கட்ட அனுமதி கிடைக்கும் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

காவிரியின் குறுக்கே கர்நாடக மாநில அரசு, மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட பல ஆண்டுகளாக முயற்சித்து வருகிறது. ஆனால், இந்த அணை கட்டினால், தமிழ்நாட்டின் வேளாண்மை வெகுவாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதனால், அணை கட்ட தமிழகஅரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும், உச்சநீதி மன்ற உத்தரவுபடி, காவிரியின் குறுக்கே ஏதேனும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமானால், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, கர்நாடகா ஆகிய 4 மாநிலங்களில் ஒருமித்த அனுமதியுடன்தான் மேற்கொள்ள வேண்டும் என்றும், எந்த மாநிலமாவது ஆட்சேபனை தெரிவித்தால், நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக, கர்நாடக மாநில அரசின் மேகதாது அணை கட்டும் திட்டம் கனவாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், தற்போது நடைபெற்று வரும்  கர்நாடக  சட்டப்பேரவை கூட்டத்தில் சுயேச்சை எம்எல்ஏ ஷரத் பச்சே கவுடா மேகதாதுவில் அணை கட்டுவது எப்போது என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, காவிரியின் குறுக்கே மேகதாதுவில் 67.16 டிஎம்சி கொள்ளளவு கொண்ட அணை விரைவில் கட்டப்படும் என்று தெரிவிவித்தவர்,  அணை கட்ட  மத்திய ஜல்சக்தி துறை முதற்கட்ட அனுமதியை வழங்கி இருப்பதாக கூறினார்.

அடுத்தக்கட்டமாக மத்தியஅரசின் சுற்றுசூழல் மற்றும் வனத்துறையின் ஒப்புதலை பெற  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தவர்,  அணை கட்ட விரிவான திட்ட அறிக்கையை காவிரி மேலாண்மை ஆணையத்தில் தாக்கல் செய்திருக்கிறோம். இதுகுறித்து, இந்த மாதம் 27ம் தேதி கூடும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில்  அனுமதி கிடைக்கும் என்று நம்புவதாக தெரிவித்தார்.