டெல்லி: காவிரி நதி நீர் பிரச்சினை குறித்து விவாதிக்க, பிப்ரவரி 1ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெறவுள்ளது. மூன்று மாதங்களுக்குப் பின்னர் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு, கர்நாடகா இடையே காவிரி நதி நீர் பிரச்னையில் சுமூகமான தீர்வுகளை காண உச்சநீதிமன்ற உத்தரவு படி, காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்து, காவிரி நிதி நீர் திறப்பு உள்பட இரு மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் பிரச்சினை தீர்த்து வைக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும், கர்நாடக மாநில அரசு, ஆணையத்தின் உத்தரவை நிறைவேற்றுவதில் தாமம் செய்து வருகிறது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பலமுறை ஆணையத்தை அணுகி வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில், கடந்த வாரம், காணொலி மூலம் டெல்லியில் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நடைபெற்றது. காவிரி நீர் ஒழங்காற்றுக் குழுவின் கூட்டம் அதன் தலைவர் வினித் குப்தா தலைமையில் டிசம்பர் 18ஆம் தேதி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரி மாநில அதிகாரிகள் கலந்துகொண்டனர். அதன்படி 5.26 டிஎம்சி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு அதிகாரிகள் பரிந்துரைத்தனர்.
இந்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் ஹல்தர் தலைமையில், பிப்ரவரி 1ந்தேதி டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். இதில் தமிழகத்துக்கு எத்தனை கன அடிநீர் திறக்க உத்தரவிடப்படும் என்பது தெரிய வரும்.