சென்னை: காவிரி பிரச்சினையில் கர்நாடக காங்கிரஸ் அரசு முரண்டு பிடித்து வரும் நிலையில், காவிரியில் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி தமிழ்நாட்டைச் சேர்ந்த  தமிழக எம்.பி.க்கள் அனைத்துக்கட்சி குழு இன்று மாலை மத்திய ஜல்சக்தி துறை அமைச்சரை சந்திக்கிறது.

காவிரியில், தமிழ்நாட்டுக்கு மாதந்தோறும் திறந்து விட  வேண்டிய தண்ணீரை கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு திறந்து விடாமல், தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது. இதனால் குறுவை சாகுபடி தண்ணீரின்றி காய்ந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழ்நாடு அரசு மத்தியஅரசு, காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்று குழு மூலம் காவிரியில் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தியது. ஆனால், திமுக கூட்டணி கட்சியான கர்நாடக காங்கிரஸ் கட்சி மறுத்து வருகிறது. இதையடுத்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

முன்னதாக, தமிழ்நாட்டுக்கும் கர்நாடகாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள காவிரி பிரச்சினை தொடர்பாக கடந்த 2018-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம்  அளித்த தீர்ப்பின் அடிப்படையில், மாதாந்திர நீர் அளவு அட்டவணை நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி, செப்.14-ம் தேதி நிலவரப்படி, தமிழகத்துக்கு கர்நாடக அரசு வழங்க வேண்டிய 103.5 டிஎம்சியில் 38.4 டிஎம்சி மட்டுமே திறந்துவிட்டுள்ளது. இதுதொடர்பாக, காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவில் தமிழக அரசு முறையிட்டபோதும், கர்நாடக அரசு தண்ணீர் திறக்க மறுத்துவிட்டது.

இதற்கிடையே, கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது என்று  முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், தமிழக அரசின் சார்பில் நீர்வளத் துறைஅமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்து கட்சிகளின் எம்.பி.க்கள் குழு, மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை சந்தித்து, காவிரியில் நீர்திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடும்படி கோரிக்கை மனு அளிப்பார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, அமைச்சர் துரைமுருகன் தலைமையில், அனைத்து கட்சி எம்.பி.க்கள் அடங்கிய குழு, இன்று மாலை மத்திய அமைச்சரை சந்தித்து கர்நாடக அரசு இதுவரைதமிழகத்துக்கு அளிக்க வேண்டிய காவிரி நீரை அளிக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு தேவையான அறிவுரைகள் வழங்கக் கோரி நேரில் சந்தித்து வலியுறுத்தும்படி அறிவுறுத்துகின்றனர்.

அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான குழுவில், திமுக சார்பில் டி.ஆர்.பாலு, அதிமுக சார்பில் மு.தம்பிதுரை, என்.சந்திரசேகரன், காங்கிரஸ் சார்பில் எஸ்.ஜோதிமணி, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில்கே.சுப்பராயன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் பி.ஆர்.நடராசன், மதிமுக சார்பில் வைகோ, பாமக சார்பில் அன்புமணி, தமாகா சார்பில் ஜி.கே.வாசன், ஐயுஎம்எல் சார்பில் கே.நவாஸ்கனி, கொமதேக சார்பில் ஏ.கே.பி. சின்னராஜ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.