பெங்களூரு:

காவிரி பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பெங்களூரில் செய்தியாளர்களிடம்  தெரிவித்தார்.

கர்நாடகாவில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் தமிழகத்தை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

கர்நாடகாவில் கடந்த 5 ஆண்டுகளாக நிலையான ஆட்சியைமுதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு வழங்கி வந்துள்ளது. மாநிலத்தில் தற்போதுள்ள  வளர்ச்சிப் பணியைத் தொடர்வதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்குமாறு கர்நாடக மக்களைக் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

நடைபெற உள்ள கர்நாடக மாநில தேர்தல் தேசிய அளவில் கவனிக்கப்பட்டு வருகிறது… இந்திய மக்களின் எண்ணங்களை கர்நாடக மக்கள் தேர்தலில் பிரதிபலிப்பார்கள் என்று நம்புவதாகவும் கூறினார்.

இந்தியாவின் அலுவல் மொழியாக இந்தி, ஆங்கிலம் உள்ளது. மத்திய அரசு இந்த இரு மொழிகளையும் பயன்படுத்தலாம். ஆனால், மாநில அளவில் சம்பந்தப்பட்ட மாநில மொழிகளுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், அந்தி மொழியைத் திணிப்பதை ஏற்க முடியாது என்ற சிதம்பரம்,

காவிரி விவகாரத்தை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு என்றும் கூறினார். அல்லது  இரு மாநிலங்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தியும் பிரச்னையைத் தீர்க்கலாம்.

ஏற்கனவே  மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது இதுபோல பல பிரச்னைகளைத் தீர்த்து வைத்திருப்பதாக கூறிய சிதம்பரம், பேச்சுவார்த்தையில் தீர்க்கப்படாத பிரச்னை இல்லை. எனவே, காவிரிப் பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முற்பட வேண்டும் என்றார்.

எதிர்க்கட்சிகளை அச்சுறுத்த பாரதியஜனதா அரசு வருமான வரித்துறை, சிபிஐ, அமலாக்கத் துறையைத் தொடர்ந்து  மத்திய அரசு பயன்படுத்தத் தொடங்கியுள்ளது என்றும் குற்றம் சாட்டினார்.

கர்நாடகத்தில் பிரசாரம் செய்துவரும் பிரதமர் மோடி, தரம் தாழ்ந்த விமர்சனங்களை முன்வைத்து வருகிறார், ஒரு பிரதமருக்கு இதுர அழகல்ல என்றார்.

அப்போது ராகுல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த சிதம்பரம்,  அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைந்து, ஆட்சியைக் கைப்பற்றினால் காங்கிரஸ் தலைவர்களால் பிரதமராக ராகுல் காந்தி முன்னிலைப்படுத்தப்படுவார் என்றும், அதுகுறித்து  கூட்டணி கட்சிகளோடு விவாதிப்போம் என்றும் தெரிவித்தார்.