சென்னை:
காவிரி பிரச்னை தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
இதில் காவிரி பிரச்சினை குறித்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
காவிரி நதி நீர் பிரச்னையில் மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கடந்த 10 தினங்களுக்கு முன் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அனைத்து விவசாயிகள் சங்க தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அதைத்தொடர்ந்து இன்று அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு அதிமுக, காங்கிரஸ், தேமுதிக, பாமக, தமாகா, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
ஆனால் அவரது கோரிக்கையை அதிமுக, பாரதியஜனதா, பாட்டாளி மக்கள் கட்சி, மக்கள் நலக்கூட்டணி கட்சிகள் ஏற்க மறுத்து கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்தன.
காங்கிரஸ், தமாகா, முஸ்லிம்லீக் போன்ற திமுக ஆதரவு கட்சிகள் இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்டன.
இன்று காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் அனைத்து கட்சி தலைவர்கள், அனைத்து விவசாய சங்க தலைவர்கள் ஆலோசனை கூட்டம் ஆரம்பமானது.
தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்று கூட்டத்தை நடத்தினார். தலைவர்களை வரவேற்று ஸ்டாலின் பேசியதாவது:
காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சனையில் அனைவரும் இணைந்து போராட சூளுரை ஏற்போம் என்றார். மேலும் பேசிய அவர், நிதி அமைச்சர் பன்னீர்செல்வத்திடம் நேரில் சென்று மனு அளித்தும் கூட தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டவில்லை என்று சாடினார்.
வரலாற்று பிழை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே அனைத்து கட்சி கூட்டத்திற்கு திமுக ஏற்பாடு செய்ததாக ஸ்டாலின் கூறினார். அதிமுக அரசோ அல்லது வேறு எந்த கட்சியோ கூட இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தால் நிச்சயம் அதில் திமுக பங்கேற்றிருக்கும் என்றார். திமுகவின் முயற்சி வெற்றி பெறக் கூடாது என சில ஊடகங்களும், வேறு சிலரும் ஆர்வம் காட்டுவதாக சாடினார்.
காவிரி பிரச்சனைக்காக ஒன்றிணைவதில் சிலருக்கு மனகசப்பு உள்ளதாக குறிப்பிட்டார். மேலும் பேசிய அவர் கடந்த 5 ஆண்டுகளாக காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் விவசாயம் பொய்த்துவிட்டதாக தெரிவித்தார்.
ஒரு போகம் மட்டுமே நடைபெற்று வந்த விவசாயத்திற்கும் ஊறு விளைந்து சூனியம் ஆகிவிட்டதாக வேதனை தெரிவித்தார். விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக உயிரை பணயம் வைத்து அறவழியில் போராட துவங்கிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
தீர்மானம் : – 1
தமிழக விவசாயிகள் குறிப்பாக டெல்டா மாவட்ட விவசாயிகள் வறுமையினாலும்,கடன் தொல்லைகளாலும் தற்கொலைக்குத் தள்ளப்படும் நிலை தமிழகத்தில் உருவாகிவிட்டது. மேலும், ஏறத்தாழ24 மாவட்டங்களில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் குடிநீர்ப் பஞ்சத்தால் தவிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
காவிரி நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்சினையில் கர்நாடக அரசு,காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்தா மல் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. பிடிவாதமான அணுகுமுறையின் காரணமாக, அரசியல் சட்ட நெருக்கடியை யும், மோதல் போக்கையும் கர்நாடக அரசு உருவாக்கி வருகிறது.
கூட்டாட்சித் தத்துவத்தைக் கேலிப் பொருளாக்கும் கர்நாடக அரசுக்கு அறிவுரை புகட்டி நல்வழிப் படுத்திட வேண்டிய மத்திய அரசு, அரசியல் காரணங்களுக்காக கர்நாடகத்தின் எதிர்மறை நிலைப்பாட்டுக்கு ஆதரவாகவும் தமிழகத்தின் பக்கமுள்ள சட்ட நெறிமுறை நியாயத்தை அலட்சியப் படுத்திடும் வகையிலும் நடந்து கொள்வது தமிழக விவசாயிகளுக்குப் பெரும் துரோகம் விளைவிப்பதாக உள்ளது.
மேலும், தமிழகத்தில் உள்ள ஏறத்தாழ 20 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்ற நிலையும் ஏற்பட்டுள்ளது.
எனவே, தமிழக விவசாயிகளுக்கு உரிய நீதி வழங்கி அவர்களின் துன்பத்தைப் போக்கவும், இந்தப் பிரச்சினையில் தமிழக மக்கள் அனைவரும் எந்தவிதக் கருத்து வேறுபாடுமின்றி ஒருங்கிணைந்து ஒரே நோக்கத்தோடு செயல்படுகிறார்கள் என்பதை உலகத்திற்கு உணர்த்தவும், உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மத்திய அரசும்,கர்நாடக அரசும் சிறிதும் மதிக்கவில்லை என்பதைக் கண்டிக்கும் வகையிலும், தமிழக அரசு, தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டி இந்தப் பிரச்சினை குறித்து விவாதித்துத் தீர்மானம் நிறைவேற்றி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் தரவேண்டும் என்றும்
அனைத்துக் கட்சித் தலைவர்களையும், விவசாய சங்கங்களின் பிரநிதிநிதிகளையும் அழைத்துச் சென்று பிரதமரைச் சந்தித்து இப்பிரச்சினையில் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் நர்மதா நதிநீர் மேலாண்மை வாரியம், கிருஷ்ணா-கோதாவரி நதிநீர் மேலாண்மை வாரியம் ஆகிய முன்னுதாரணங்களைப் பின்பற்றி,விருப்பு வெறுப்பின்றி,நடுநிலையோடு தீர்வு காண வேண்டும் என்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புக்களின் இந்தக் கூட்டம் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் : – 2
காவிரி நீர்ப் பங்கீட்டுப் பிரச்சினையில் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில், 30.9.2016 அன்று காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு நான்கு நாட்களில் அமைக்க வேண்டுமென்று உத்தரவிட்டது. கர்நாடக அரசின் வழக்கறிஞர் தண்ணீர்ப் பங்கீடு குறித்து காவிரி மேற்பார்வைக் குழுவிடம் தமிழகம் முறையிட வேண்டுமென்று வாதிட்டாரே அன்றி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது சம்மந்தமான உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகி, காவிரி மேலாண்மை வாரியத்தை 4-10-2016க்குள் அமைக்க ஒப்புக் கொண்டார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்ட பிறகு, நதி நீர் பங்கீட்டில் உள்ள உண்மை நிலைமைகளையும் அதற்கான அடிப்படைகளையும் மேலாண்மை வாரியம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளும் என்று மத்திய அரசு குறிப்பிட்டது.
இதன் தொடர்ச்சியாக மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது. உச்ச நீதி மன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணிகள் தொடங்கி விட்டதாக மத்திய நீர்வளத் துறை செயலாளர் கூறினார்.
உச்ச நீதி மன்ற உத்தரவை நிறைவேற்றுவதாக ஒப்புக் கொண்ட மத்திய அரசு, அதை நிறைவேற்றுவதற்கு 24 மணி நேரம் மட்டுமே இருந்த தருணத்தில்,ஏற்கனவே மேற்கொண்ட நிலைப்பாட்டிற்கு முற்றிலும் மாறான நிலைப்பாட்டினை மேற்கொண்டது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்குமாறு உத்தரவிட உச்ச நீதி மன்றத்துக்கு அதிகாரம் இல்லையென்றும்,
காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை ஏற்பதா மறுப்பதா என்பதை நாடாளுமன்றம் தான் முடிவெடுக்க முடியுமென்றும்,காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து மத்திய அரசே இறுதி முடிவெடுக்க முடியுமென்றும் மத்திய அரசு வழக்கறிஞர் உச்ச நீதி மன்றத்தில் தெரிவித்தார்.
இவ்வாறு மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு அரசியல் காரணங்களுக்காக ஏற்கனவே மேற்கொண்ட நிலைப்பாட்டில் ஓர் உறுதியற்ற போக்கைக் கடைப்பிடித்து நடுநிலையிலிருந்து தவறி விட்டது.
மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர்ப் பிரச்சினைகள் சட்டத்தின் அடிப்படையில் மாநிலங்களுக்கு இடையே ஏற்படும் நதிநீர்ப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அமைக்கப்படும் நடுவர் மன்றங்களின் உத்தரவு, உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு நிகரானதாகும் என்றும்,
நடுவர் மன்ற உத்தரவை அரசிதழில் பதிவிட்ட உடனேயே அதனை மேற்பார்வையிடவும்,கண்காணிக்கவும் ஒரு வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்றும், அந்த வாரியம் அமைக்கப்பட்ட பிறகு, 30 நாட்களுக்குள் நாடாளுமன்றத்தில் அவ்வாரியம் குறித்த அறிவிக்கையைச் சமர்ப்பித்து அனுமதி பெற வேண்டும் என்றும் அச்சட்டம் மிகத் தெளிவாகத் தெரிவித்துள்ளது.
எனவே, நதிநீர்ப் பிரச்சினைகள் சட்டம் 1956ன்படி மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை
வாரியம் அமைக்க வேண்டும் என்பது சட்டப்படியான கடமையும் பொறுப்புமாகும்.
உச்ச நீதி மன்றத்தில் காவிரிப் பிரச்சினை சம்பந்தமான வழக்கில் தமிழகம், கர்நாடகம்,கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்கள், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு தொடர்பாகத் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு ஏற்கலாமா என்பதை முடிவு செய்வதற்கான விசாரணை19-10-2016 அன்று நடைபெற்றது. விசாரணையின் போது மாநிலங்கள் ஒரு நிலைப்பாட்டையும், மத்திய அரசு அதற்கு முற்றிலும் மாறுபட்ட நிலைப்பாட்டையும் எடுத்துள்ளன.
தமிழகத்திற்குச் சிறிதும் பயனில்லாத நிலைப்பாட்டினை மத்திய அரசு ஏற்கனவே மேற்கொண்டதன் காரணமாக, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது சம்பந்தமான கோரிக்கை தற்போது பின்னுக்குத் தள்ளப்பட்டு, மாநிலங்களின் மேல்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு ஏற்பதா வேண்டாமா என்ற பிரச்சினை முன்னணிக்கு வந்திருக்கின்றது.
வேண்டுமென்றே நீதி – நியாயத்திற்கு எதிராகவும், சட்டத்துக்குப் புறம்பாகவும் ஒரு சார்பு நிலைப்பாட்டை மேற்கொண்டு கருத்துக்களை வெளிப்படுத்தும் மத்திய அமைச்சர்களின் போக்கை மிகக் கடுமையாகக் கண்டிப்ப தோடு,அரசியல் ஆதாயம் கருதி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதைத் தள்ளிப் போட்டு, பிரச்சினையை திசை திருப்பும் மத்திய அரசின் முயற்சியையும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புக்களின் இந்தக் கூட்டம் கண்டிக்கிறது.
தீர்மானம் : – 3
காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த ஐந்தாண்டுகளாக குறுவை பொய்த்துப் போய் விட்டது. மேட்டூர் அணையில் தற்போது உள்ள தண்ணீர் அடுத்த பதினெட்டு நாட்களுக்குக் கூடப் போதாத நிலை ஏற்பட்டுள்ளது. வினாடிக்கு 2000கன அடி வீதம் தமிழகத்திற்கு தண்ணீர் தர வேண்டுமென்று கர்நாடக அரசுக்கு உச்ச நீதி மன்றம் உத்தரவிட்ட போதும்,
அந்த உத்தரவினை கர்நாடக அரசு இதுவரை நிறைவேற்றவில்லை. அப்படியே நிறைவேற்றினாலும் அந்தத் தண்ணீர் சம்பாப் பயிரைக் காப்பாற்ற நிச்சயமாக உதவாது. இந்த நிலையில் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் சொல்லொணா துயரங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே குறுவை, சம்பா சாகுபடிக்குத் தேவையான தண்ணீரை வழங்காத காரணத்தால், விவசாயிகளின் கண்ணீரைத் துடைத்து அவர்களுடைய துன்பங்களை ஓரளவிற்கேனும் குறைத்திடும் வகையில் ஏக்கர் ஒன்றுக்கு 30ஆயிரம் ரூபாய் வீதம் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டுமென்று தமிழக அரசையும், மத்திய அரசையும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புக்களின் இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் : – 4
காவிரி நீர்ப் பங்கீடு குறித்து ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழுவினர் காவிரி படுகைப் பகுதிகளில் பார்வையிட்ட நிலையிலும் அந்த குழுவினரின் அறிக்கை தற்போது தமிழகத்தில் நிலவி வரும் உண்மைச் சூழ்நிலையை நடுநிலையோடு வெளிப்படுத்தும் வகையில் இல்லை என்று பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புக்களின் இந்தக் கூட்டம் பதிவு செய்கிறது.
இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டு உள்ளது.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.
மு.க.ஸ்டாலின்,, தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர்
துரைமுருகன், தலைமைக் கழக முதன்மைச் செயலாளர், தி.மு.க.,
திருநாவுக்கரசர், தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி,
ஜி.கே.வாசன், தலைவர், தமிழ் மாநில காங்கிரஸ்
கி. வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்
கே. எம்.காதர் மொய்தீன், தலைவர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்,
எம்.எச்.ஜவாகிருல்லாஹ், தலைவர், மனித நேய மக்கள் கட்சி,
என்ஆர். தனபாலன், அமைப்பாளர், பெருந்தலைவர் மக்கள் கட்சி
கே.ஆர். இராமசாமி, எம்.எல்.ஏ., சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர்,
பி.வி. கதிரவன், மாநில பொதுச் செயலாளர், அகில இந்திய பார்வர்டு பிளாக்
ஈ.ஆர். ஈஸ்வரன், பொதுச்செயலாளர், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி,
சுப.வீரபாண்டியன், பொதுச்செயலாளர், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை,
பொன். குமார் , தலைவர், தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி,
கலி. பூங்குன்றன், துணைத் தலைவர், திராவிடர் கழகம்
பவுன்குமார் , விவசாய பிரிவு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி,
கே.கே.எஸ்.எம். தெஹலான் பாகவி, மாநிலத் தலைவர், சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா,
கு. செல்லமுத்து, தலைவர், உழவர் உழைப்பாளர் கட்சி,
பி.ஆர். பாண்டியன், அனைத்து விவசாயிகள் சங்கம்
பி.கே. தெய்வசிகாமணி, விவசாய சங்கங்கள் கூட்ட இயக்கம்,
பி. அய்யாக்கண்ணு, தலைவர், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம்,
பாலு தீட்சிதர் , காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கம்,
ஹேமநாதன் , தலைவர், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கம்,
பூ.விஸ்வநாதன், மாநில தலைவர், தமிழக ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாயிகள் சங்கம்,
திருப்பூர் அல்தாப், பொதுச்செயலாளர், தமிழ் மாநில தேசிய லீக்,
பஷீர் அகமது, தலைவர், தேசிய லீக்,
கா. லியாகத் அலிகான், தலைவர், சிறுபான்மைச் சமூகப் புரட்சி இயக்கம்,
பி.என். அம்மாவாசி, நிறுவனத் தலைவர், அகில இந்திய வல்லரசு பார்வர்டு பிளாக் மத்தியக்குழு
அதியமான் , தலைவர், ஆதித் தமிழர் பேரவை,
கே.ஏ.எம்.முகம்மது அபுபக்கர், சட்டமன்ற உறுப்பினர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்
கோவை தங்கம், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர், தமிழ் மாநில காங்கிரஸ்
ஆர்.எஸ். பாரதி, எம்.பி., அமைப்புச் செயலாளர், தி.மு.க.,
டி.கே.எஸ். இளங்கோவன்,எம்.பி., செய்தி தொடர்புச் செயலாளர், தி.மு.க.,
கே.பி. இராமலிங்கம், தி.மு.க. விவசாய அணிச் செயலாளர்
ம. சின்னசாமி, தி.மு.க. விவசாய அணிச் செயலாளர்
ஏ.கே.எஸ். விஜயன், தி.மு.க. விவசாய அணிச் செயலாளர்
உ. மதிவாணன், தி.மு.க. விவசாயத் தொழிலாளர் அணிச் செயலாளர்
குனங்குடி ஆர்.அனிபா, துணைத் தலைவர், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம்
மற்றும்
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த புலியூர் நாகராசன்,பார்த்தசாரதி
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த எம்.பெரியசாமி, எஸ்.கோவிந்தன்,எஸ். கோவிந்தசாமி
தேசிய லீக் கட்சியைச் சேர்ந்த குத்தூஸ் ராஜா
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியைச் சேர்ந்த முத்துராமலிங்கம்
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்த அப்துல் ரகுமான்,முன்னாள் எம்.பி.,
உழவர் உழைப்பாளர் கட்சியைச் சேர்ந்த கே.வி.ராஜ்குமார்,கோபாலகிருஷ்ணன்,பொன்னுசாமி, காருமாங்குடி வெங்கடேசன்
சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா கட்சியைச் சேர்ந்த அப்துல் ஹமீது
விவசாய சங்க கூட்ட இயக்கத்தைச் சேர்ந்த காவிரி தனபாலன்,வலிவலம் மு.சேகரன், கிருஷ்ணகிரி கே.எம்.இராமநாதன், சிதம்பரம் ஏ.பி.இரவீந்திரன், வழக்கறிஞர் எம்.எஸ். அருண்குமார்
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரம், சதாசிவம்
அனைத்து விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த சிவ.ராஜசேகரன், டிபிகே. இராஜேந்திரன், தஞ்சை புண்ணியமூர்த்தி, நாகை எஸ்.ராமதாஸ், தஞ்சை எஸ்.பாஸ்கரன்
நமது கொங்கு முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த எம். தங்கவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.