சென்னை,
மிழகத்தில் நடைபெற இருக்கும் 3 தொகுதி மற்றும் பாண்டிச்சேரி ஒரு தொகுதி இடைத்தேர்தலுக்கு நாளை வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது.
தமிழகத்தில் கடந்த மே 16-ந்தேதி நடந்த சட்டசபை தேர்தலின் போது பணப்பட்டுவாடா புகார் காரணமாக அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதி தேர்தல்கள் தள்ளி வைக்கப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டது.
இதனால் மற்ற 232 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
அதன்பிறகு திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சீனிவேலு உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
எனவே அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கும் நவம்பர் 19-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமி‌ஷன் அறிவித்தது.
nominations
இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது.
மனுதாக்கல் செய்ய நவம்பர் 2-ந் தேதி கடைசி நாள்.
மறுநாள் (3-ந் தேதி) மனுக்கள் பரிசீலனை நடக்கிறது.
மனுக்களை வாபஸ் பெற நவம்பர் 5-ந் தேதி கடைசி நாள் ஆகும்.
அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் உள்ள  தாலுகா அலுவலகத்தில் காலை 11 மணி தொடங்கி பிற்பகல் 3 மணி வரை மனுகள் பெறப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
அரவக்குறிச்சி தொகுதியில் உள்ள தாலுகா அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி சைபுதீனிடம் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
 
தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட விரும்புபவர்கள் தஞ்சாவூர் மணிமண்டபம் அருகே உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் (பொறுப்பு) இன்னாசி முத்துவிடம் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் திருப்பரங்குன்றத்தில் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி ஜீவா முன்னிலையில் மனுதாக்கல் செய்யலாம்.
அரவக்குறிச்சியில் அ.தி.மு.க. வேட்பாளராக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும், தி.மு.க. வேட்பாளராக கே.சி.பழனிச்சாமியும், பா.ம.க. வேட்பாளராக பாஸ்கரனும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தஞ்சையில் அ.தி.மு.க. சார்பில் ரெங்கசாமியும், தி.மு.க. சார்பில் அஞசுகம் பூபதியும் போட்டியிடுகிறார்கள். பா.ம.க. சார்பில் குஞ்சிதபாதம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக ஏ.கே.போஸ், தி.மு.க. வேட்பாளராக டாக்டர் சரவணன், பா.ம.க. வேட்பாளராக செல்வம் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்கள் 27, 28-ந் தேதிகளில் மனுதாக்கல் செய்வார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
புதுச்சேரி
புதுவையில் நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் முதல்- அமைச்சர் நாராயணசாமி போட்டியிடுகிறார்.
அ.தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இங்கும் வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது. தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் உள்ள தொழில் மற்றும் வணிகவரித்துறை அலுவலகத்தில் நாளை காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படுகிறது. 19-ந் தேதி வாக்கு பதிவு நடைபெறுகிறது.