காவிரி பிரச்சினை: கர்நாடகாவில் நாளை அனைத்துக்கட்சி கூட்டம்! தமிழகம்…?

Must read

பெங்களுர்:
காவிரி பிரச்சினை தொடர்பாக தமிழகத்தின் நெருக்கடியை சமாளிக்க நாளை பெங்களுரில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கர்நாடக அரசு கூட்டியுள்ளது.
உச்சநீதி மன்ற தீர்ப்புபடி, தமிழகத்திற்கு அவ்வப்போது குறிப்பிட்ட டிஎம்சி தண்ணீரை  கர்நாடக அரசு  காவிரியில் திறந்து விட வேண்டும். ஆனால், கர்நாடக அரசு சுப்ரீம்கோர்ட்டு, காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு எதையும் மதிக்காமல், தமிழகத்தின் வேண்டுகோளுக்கும் செவி சாய்க்காமல் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது.
தண்ணீர் திறந்துவிட கோரி தமிழக அரசு மற்றும் தமிழக விவசாயிகளின்  கோரிக்கைக்கு, பதில் அளித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, கர்நாடகத்தில் உள்ள அணைகளில் தண்ணீர் இருப்பு குறைவாக உள்ளதால் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று அறிவித்தார்.
both cm,
இதையடுத்து காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி சம்பா சாகுபடிக்கு திறக்க வேண்டிய காவிரி நீர் இன்னும் திறக்கப்படவில்லை. பயிர்கள் அனைத்தும் தண்ணீர் இல்லாமல் கருகும் நிலை ஏற்பட்டு வருகிறது.
இதையடுத்து,  காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கோரி மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.
இதற்கிடையில் இன்று கர்நாடகாவில் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு கர்நாடக அரசு அழைத்து விடுத்துள்ளது. அதில் காவிரி பிரச்சினை, தமிழக அரசின் வழக்கு தொடர்பாக ஆலோசிக்கப்படு கிறது. மேலும்  அக்டோபர் மாதத்தில் 50 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டியது கட்டாயம்.  அதற்கும் வறட்சியை காரணம் காட்டி , இதுவரை கர்நாடகா அந்த அளவு தண்ணீர் தரவில்லை.
நாளை நடைபெற இருக்கும் அனைத்துக்கட்சி கூட்டத்தில்,  தமிழகம் தொடர்ந்து நெருக்கடி தருவதால் அதை எப்படி சமாளிப்பது என்பது குறித்து  ஆலோசிக்கப்பட உள்ளது.  அதிகாரிகள், சட்ட வல்லுநர்கள் இதில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த கூட்டத்தில் கர்நாடகத்தை சேர்ந்த் மத்திய் அமைச்சர்களான சதானந்தகவுடா, அனந்தகுமார் உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கூட்டத்தை தொடர்ந்து, அனைத்து கட்சி பிரமுகர்களும், மத்திய அமைச்சர்கள் தலைமையில் பிரதமரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
தமிழ்நாடு
ஆனால், தமிழக அரசு காவிரி பிரச்சினை தொடர்பாக எந்தவொரு கட்சியினரையும்  அழைத்து, ஆலோசித்தது  கிடையாது. தமிழக அரசியல் கட்சிகளின் கோரிக்கைக்கு செவி சாய்க்காமலும், தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளுக்கும் பதில் அளிக்காமல் தான்தோன்றித்தனமாக செயல்பட்டு வருகிறது. கர்நாடக கூட்டியிருப்பதுபோல ஒரு அனைத்துக்கட்சி கூட்டத்தை தமிழகத்தில் கூட்டி, அவர்களின் ஆலோசனையை பெற்று மேற்கொண்டு நடவடிக்கை எடுத்தால் அண்டைய மாநிலங்களின் அரசியல் நெருக்கடிகளை சமாளிக்க ஏதுவாக இருக்கும்.
ஆனால் தமிழக அரசோ, தமிழக முதல்வரோ இதுகுறித்து கிஞ்சித்தும் கவலைப்படுவது கிடையாது. கர்நாடக அரசுக்கு நெருக்கடி தர வேண்டுமானால்,  முதலில் அனைத்து கட்சி பிரதிநிதிகளும்  ஒன்று சேர்ந்து பிரதமரை சந்திக்க டெல்லி செல்ல வேண்டியது அவசியம்.  செய்யுமா தமிழக அரசு….?
இதற்கிடையில், கே.பி.ராமலிங்கம் தலைமையில் தமிழக விவசாயிகள் சங்க பிரதிநிதிகளை கர்நாடக முதல்வர்   சந்திக்க  நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

More articles

Latest article