சென்னை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி உண்ணாவிரதம் இருக்க நடிகர் ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
திரைத்துறை போலவே அரசியலிலும் ரஜினி, கமல் போட்டி ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று கமல் அறிவித்தார். ரஜினியோ மாணவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்றார். இது போல பல பிரச்சினைகளில் இருவரும் கருத்துப்போர் நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது துரோகம் என்ற தலைப்பில் நேற்று திருச்சியில் கமல் மாநாடு நடத்தினார். இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்க ரஜினி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில், காவிரி போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தி வருகின்றன. வரும், 8ம் தேதி, தமிழ்த் திரைத்துறை சார்பில், சென்னை, வள்ளுவர் கோட்டத்தில், அறவழிப் போராட்டம் நடக்க இருக்கிறது. நடிகர் ரஜினிகாந்த், இதில் பங்கேற்று, தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்ய, திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கெனவே காவிரி விவகாரத்தில் மத்திய அரசு துரோகம் இழைப்பதாக கூறி, நெய்வேலி அனல் மின் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டத்தை திரைத்துறையினர் நடத்திய போது, சென்னையில் தனியாக உண்ணாவிரதம் இருந்தார் ரஜினிகாந்த். ஆகவே அதே போல திரைத்துறையினர் போராட்டம் அறிவித்துள்ள மார்ச் 8ம் தேதி, தனியாக உண்ணாவிரதம் இருப்பார் என்றும் கூறப்படுகிறது.