டில்லி,

காவிரி வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. இன்றைய விசாரணை யின்போது,  தமிழகத்திற்கு பாதிப்பில்லாத வகையில் காவிரியின் குறுக்கே அணை கட்டலாம் என உச்சநீதி மன்றம் கருத்து தெரிவித்தது.

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக, நடுவர்மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட 4 மாநில அரசுகள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான இறுதி விசாரணை கடந்த மாதம் 11–ந் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கடந்த வாரம் நடைபெற்ற  விசாரணையின்போது, மத்திய அரசுக்கு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்தது ஏன் என்று கேள்வி எழுப்பிய அமர்வு, இவை அனைத்திற்கும் சட்ட ரீதியிலான விளக்கம் தேவை என்று அதிரடியாக உத்தரவிட்டனர்.

கடந்த 6   நாட்களாக தமிழகம் தனது தரப்பு வாதத்தை முன்வைத்து வாதிட்டு வருகிறது. நேற்றைய விசாரணையின்போது, மத்திய அரசிடம் அதிகாரங்கள் இருந்தும், காவிரி பிரச்சினையில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்த மத்திய அரசு தவறி விட்டது என்றும்,  காவிரியின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டும் போது கர்நாடக அரசு தமிழக அரசிடம் கேட்கவில்லை என்றும் கூறியது.

இந்நிலையில், இன்றைய விசாரணையின்போது, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தமிழகத்திற்கு பாதிப்பில்லாத வகையில் காவிரியின் குறுக்கே அணை கட்டலாமே என  கருத்து தெரிவித்துள்ளது.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு விசாரணையில், மேற்பார்வை குழு அமைத்து மேகதாது வில் அணை கட்டும் பணியை கண்காணிக்கலாம் என்றும்,  மேற்பார்வை குழு அமைக்கும் பட்சத்தில் பராமரிப்பு பணிகளில் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கலாம் என்றும் கூறியுள்ளது.