சென்னை: தமிழ்நாட்டில் செயல்படும் பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் அதிகரிக்கும் ஜாதி பாகுபாடு குறித்து ஆய்வு செய்த போலீஸ் கமிஷன் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை பரிந்துரை செய்துள்ளது.
‘பள்ளிகளில் ஜாதி பாகுபாட்டை ஊக்குவிக்கும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என மாநில போலீஸ் கமிஷன் பரிந்துரை செய்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள பல பள்ளிகளில் சாதி மோதல்கள் ஏற்பட்டுள்ளது. அதுபோல பல பகுதிகளில் உள்ள ஆசிரியர்களும், சாதிய ரீதியிலாக மாணவர்களை நடத்துவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. சாதி இல்லாத சமத்துவதும் என்று கூறும் தமிழ்நாடு அரசு, சாதி சான்றிதழ் மூலமே மாணவர் சேர்க்கையை கட்டாயமாக்கி உள்ளது. மேலும், எஸ்.எஸ்.டி மாணவர்களுக்கு அரசு பல்வேறு சலுகைகளையும் வழங்கி வருகிறது. இதனால், மாணவர்களிடையே விரோத போக்குகள் வேரூன்றி வருகின்றன. இதனால், அவர்களுக்கு இடையே மோதல்களும் நடக்கின்றன.
கடந்த ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட சாதி மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, பள்ளி வளாகங்களில் சாதிய பாகுபாட்டை களைவது குறித்து ஆலோசிக்க தமிழக அரசு கமிட்டி அமைத்திருந்தது. ஓய்வுபெற்ற நீதிபதி கே. சந்துரு தலைமையிலான ஒரு நபர் கமிட்டி தனது அறிக்கையை தமிழக முதல்வர் மு க ஸ்டாலினிடம் சமர்ப்பித்துள்ளது. அதில் முக்கிய 10 பரிந்துரைகள் வழங்கப்பட்டன.
அதுபோல கடந்த 2023 டிசம்பரில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்கம் பள்ளிகளில் இருக்கும் சாதிய பாகுபாடுகள் குறித்து ஆய்வு நடத்தியது. மாநிலம் முழுவதும் 36 மாவட்டங்களில் உள்ள 321 அரசு பள்ளிகள், 58 அரசு உதவிபெரும் பள்ளிகள், 62 தனியார் பள்ளிகள் என 441 பள்ளிகளை சேர்ந்த 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கக்கூடிய 644 மாணவர்கள், 50 பயிற்சிபெற்ற தன்னார்வலர்கள் ஆகியோர் சுமார் 3 மாதங்கள் நடத்திய ஆய்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வானது, 90 சதவீதம் பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களிடமும் 10 சதவீதம் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மத்தியில் நடத்தப்பட்டது என தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும், 441 பள்ளிகளில், 39 வடிவங்களில் தீண்டாமை உள்ளது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் இடையே தீண்டாமை பார்ப்பது, தலித் மாணவரை தொடாமல் இருப்பது, தலித் மாணவர்களுக்கு தண்டனை அதிகம் தருவது உள்ளிட்ட தீண்டாமை கொடுமைகள் நடந்திருப்பதும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், போலீஸ் கமிஷனும் இதுகுறித்து ஆராய்து அறிக்கை கொடுத்துள்ளது. அதில், பள்ளிகளில் ஜாதி உணர்வுகளை ஒழித்து மாணவர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும். பள்ளிகளில் ஜாதி பாகுபாட்டை ஊக்குவிக்கும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல பரிந்துரைகளை முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கி உள்ளது.
போலீஸ் கமிஷன் கொடுத்துள்ள அறிக்கையில் ,
பள்ளிக் கல்வித் துறை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஜாதி பாகுபாடு ஏதும் நடக்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்.
இது போன்ற பாகுபாடுகளுக்கு ஆளாகக்கூடிய பள்ளிகள் குறித்து கணக்கீடு செய்ய வேண்டும்.
எந்தவொரு குறிப்பிட்ட குடும்ப ஜாதி ஆசிரியர் குழுவால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும்.
ஜாதி பாகுபாட்டை ஊக்குவிக்கும் ஆசிரியர்கள் வேறு இடங்களுக்கு பணியிடை மாற்றம் செய்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்.
தலைமையாசிரியர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்களுக்கு குழந்தைகளை சரியான பாதையில் வழிநடத்துவதில் முக்கிய பொறுப்பு உள்ளது.
பள்ளிகளில் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்த வேண்டும்.
இவ்வாறு மாநில போலீஸ் கமிஷன் பரிந்துரை வழங்கி உள்ளது.