கடலூர்: கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய முந்திரை ஆலை தொழிலாளர் கொலை வழக்கில், திமுக எம்.பி. ரமேஷ் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார். கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்து வந்த நிலையில், பிரச்சினை பூதாகாரமாக எழுந்த நிலையில், நீதிமன்றத்தில் இன்று சரணடைந்துள்ளார்.

கடலூர் திமுக எம்.பி. ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஆலை, பண்ருட்டி அருகில் பணிக்கன்குப்பம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இங்கு வேலை செய்துவந்த தொழிலாளி கோவிந்தராஜ் என்பவர்  கடந்த செப்டம்பர் 19ம் தேதி  மர்மமான முறையில் மரணமடைந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது உடலில் காயம இருந்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. கோவிந்தராஜை,. திமுக எம்.பி.  ரமேசும், அவரது ஆட்களும் அடித்து கொலை செய்துள்ளதா,  கோவிந்தராஜின் மகன் செந்தில்வேல் காடாம்புலியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். ஆனால், காவல்துறையினர் வழக்குபதிவு செய்யாத நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த  சென்னை உயர்நீதிமன்றம், காவல்துறையினரை கடுமைகாக விமர்சித்ததுடன், கோவிந்த ராஜின் உடலை அண்டை மாநிலமான,  புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு எடுத்துச்சென்று  உடற்கூறு பரிசோதனை செய்து, அறிக்கை அளிக்க உத்தரவிட்டது. இதையடுத்து, வழக்கு பதிவு செய்த காவல்துறை, சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது.  ஏடிஎஸ்பி கோமதி தலைமையில் கடந்த 28ஆம் தேதி சிபிசிஐடி  விசாரணை தொடங்கியது.

விசாரணையில், கோவிந்தராஜ் திமுக எம்.பி. ரமேஷ் மற்றும் அவரது அடியாட்களால், அடித்தும், மதுவில் விஷம் ஊற்றிக்கொடுத்தும், கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது. அதையடுத்து,  திமுக எம்பி ரமேஷ் மற்றும் அவரது ஊழியர்கள் 5 பேர் மீது கொலை  வழக்குப் பதிவு செய்தனர். கடலூர் எம்பி டி.ஆர்.வி.ரமேஷ், இவரது உதவியாளர் நடராஜன், முந்திரி தொழிற்சாலை மேலாளர் கந்தவேல், அல்லா பிச்சை, சுந்தர் என்கிற சுந்தர்ராஜ், வினோத் ஆகியோர் மீது 302 கொலை, 201 தடயம் மறைப்பது, 149 சதிதிட்டம், 120b கூட்டு சதிதிட்டம், 147 -5 பேருக்கு மேல் கூட்டாக சேர்நது தாக்குதல், 148-சம்பவத்தில் ஈடுபடுவதும் என 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து ரமேஷ் எம்.பி. தலைமறைவானதாக கூறப்பட்டது. அவர் சென்னையில் முகாமிட்டுள்ளதாக தகவல்கள் பரவின. கைது செய்யப்பட்ட  மற்ற 5 பேரையும் கடலூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு அழைத்து வந்து  நள்ளிரவு 2 மணி வரை விசாரணை நடத்தப்பட்டது.

இதில் நடராஜன் என்பவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்  பின் தற்பொழுது அவரின் உடல்நிலை சீராகிய நிலையில்  5 பேரும் கைது செய்யப்பட்டு  நீதிபதி முன்னிலையில் ஆஜர் படுத்தினர் பின் ரிமாண்ட் செய்து  கடலூர் கிளை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.

இந்த விவகாரம் கடலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், திமுக அரசு மீதான விமர்சனங்களும் எழுந்தது.  குற்றவாளிகளுக்கு திமுக அரசு அடைக்கலம் கொடுப்பதாக விமர்சிக்கப்பட்டது. பாமகவும், திமுக எம்.பி. ரமேஷை கைது செய்ய வேண்டும் வலியுறுத்தி வந்தது.

இந்த நிலையில், பண்ருட்டி நீதிமன்றத்தில் நீதிமன்ற நடுவர் கற்பகவல்லி முன்னிலையில் திமுக எம்.பி. ரமேஷ் இன்று சரண் அடைந்தார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி. ரமேஷ், தன் மீது சுமத்தப்பட்ட புகார் ஆதாரமற்றது என்பதை சட்டத்தின்முன் உரிய ஆதாரங்களுடன் நிரூபித்து வெளியே வருவேன் என்றும்  திமுக அரசு மீது வீண் பழி சுமத்தப்படுவதை தடுக்கவே நீதிமன்றத்தில் சரணடைவதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.