விழுப்புரம்: பண்ருட்டி முந்திரி ஆலை தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷை கடந்த இரு நாட்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், அவரை ஒரு நாள் சிபிசிஐடி காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த பணிக்கன்குப்பத்தில், கடலூர் தி.மு.க எம்.பி. டி.ஆர்.வி.எஸ். ரமேஷுக்குச் சொந்தமான முந்திரி ஆலையில் பணியாற்றி வந்த மேல்மாம்பட்டு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர், கடந்த செப்டம்பர் மாதம் 19-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், சந்தேக மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்து, தி.மு.க எம்.பி. ரமேஷ் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். ஆனால், இந்த வழக்கில் திமுக எம்.பி.யை கைது செய்யாமல் காவல்துறையினர் இழுத்தடித்து வந்தனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் முறையிட்டதைத் அடுத்து ,வழக்கை சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றி தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டடார். அதையடுத்து,
இந்த மர்ம மரணம் என்பதை கொலை வழக்கு என மாற்றி சிபிசிஐடி போலீஸார் பதிவு செய்தனர். சம்பவத்தில் தொடர்புடைய நடராஜன், கந்தவேலு, அல்லா பிச்சை, வினோத் மற்றும் சுந்தரராஜனை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தி.மு.க எம்.பி. ரமேஷ் தலைமறைவாக இருந்து வந்த நிலையில், பண்ருட்டி நீதிமன்றத்தில் கடந்த 2 தினங்களுக்குமுன் அவர் சரணடைந்தார்.
இன்று காலை,ரமேஷ் மீண்டும் கடலூர் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பிரபாகரன் முன்னிலையில் ரமேஷ் ஆஜர்படுத்ப்பட்டார். அப்போது அவரை 2 நாள் காவலில் விசாரிக்க சிபிசிஐடி போலீசார் மனுத்தாக்கல் செய்தனர்.
வழக்கை விசாரித்த கடலூர் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பிரபாகரன், ரமேஷை ஒரு நாள் காவலில் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி-க்கு உத்தரவிட்டார்.