சென்னை: நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் வெற்றி பெற்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குடும்ப அரசியல் ஊரகப்பகுதிகளிலும் பரவி இருப்பதை அம்பலப்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கான ஊராட்சி உறுப்பினா், ஒன்றியக் குழு உறுப்பினா், ஊராட்சித் தலைவா் மற்றும் ஊராட்சி வார்டு  உறுப்பினர் பதவிகளுக் கான தோ்தல் 2 கட்டங்களாக அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில்  நடைபெற்றது. மேலும், 28 மாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பதவிக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தல் வாக்குகள் எண்ணிக்கையும், 12ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது.

ஊரக உள்ளாட்சித் தேர்தலின் முழுமையான முடிவுகள் இன்று மதியம் 2 மணிக்குள் வெளியாகும் என்றாலும், ஒவ்வொரு பகுதியிலும் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த தேர்தலில் திமுக அதிக இடங்களை பிடித்து சாதனை படைத்துள்ளது. இந்த தேர்தலில் கணவன் மனைவி மற்றும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களே போட்டியிட்டு வெற்றி பெற்ற சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. அதுபோல  வண்டலூர் ஊராட்சியில் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட மாற்றுத்திறனாளி கணவன், மனைவி வெற்றி பெற்றுள்ளனர். இது வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில், தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே, குருவிகுளம் ஒன்றியத்திற்குட்பட்ட பெருங்கோட்டூர் ஊராட்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் ஊராட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி மாவட்டத்தில் பெருங்கோட்டூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு காங்கிரஸ் சார்பில் முருகேஸ்வரி என்பவர் போட்டியிட்டார்.அவரைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தைச் சேர்ந்த சின்னத்தாய் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். மேலும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிட்டனர். மொத்தம் 5 பெண்கள் உள்பட 8 பேர் போட்டியிட்ட நிலையில், அனைவரும்  வெற்றி பெற்றதாக தேர்தல் அலுவலர்கள் அறிவித்துள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் தேர்தலில் வெற்றிபெற்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குடும்ப ஆட்சி கிராமங்களில் பரவிவிட்டதாக நெட்டிசன்கள்  சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.