தேர்தல் காலத்தில் பறக்கும் படையினர் பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் வாகனங்களை சோதனை செய்கின்றனர். ஆனால், திரிணாமூல் காங்கிரஸ் தலைவர்களின் வாகனங்களை மட்டும் திட்டமிட்டு தொந்தரவு செய்யும் வகையில் மத்திய படையினர் சோதனை செய்கிறார்கள் என்று அந்தக் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் இந்த புகாருக்கு தேர்தல் ஆணையம் இதுவரை பதிலளிக்கவில்லை.

வடக்கு தினஜ்பூர் மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய மம்தா, தான் அதிகாலை கொல்கத்தா விமான நிலையத்திற்குச் செல்லும் போது கூட தனது வாகனம் சோதனை செய்யப்பட்டது என்று கூறினார். “துணிவு இருந்தால் தினமும் என் வாகனத்தை சோதியுங்கள்” என்றும் சவால் விடுத்தார்.

மேலும், திரிணாமூல் தலைவர்களின் குடும்பத்தினரையும் சோதனை என்ற பெயரில் தொந்தரவு செய்கிறார்கள் என்றும் கூறினார்.

மத்திய அரசு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, தேர்தலில் வெல்ல முழு சக்தியையும் பயன்படுத்துகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார். பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் வாகனங்கள் மட்டும் சோதனை செய்யப்படுவதில்லை என்றும் தெரிவித்தார்.

தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு வரும் மத்திய அமைச்சர்கள் மூலம் பணம் கொண்டு கடத்தப்படுகிறது, மத்திய படையினர் கொண்டு வரும் பொருட்களை யாரும் சோதிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

மேலும், மத்திய நிதி அமைச்சர் தேர்தல் தொடர்பான வாக்குறுதி அட்டைகள் வழங்கினாலும், அவர்மீது தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் மம்தா குற்றம்சாட்டினார்.

[youtube-feed feed=1]