உச்ச நீதிமன்றத்தில் 73000 வழக்குகள் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் மொத்தம் 4.4 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களை சேர்ந்த நீதிபதிகள் முக்கிய நிகழ்ச்சிகளில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு நாட்டின் வளர்ச்சி குறித்த தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் நிகழ்வுகள் சமீபகாலமாக அதிகரித்து வரும் நிலையில் நீதிமன்றங்களில் கோடிக்கணக்கான வழக்குகள் தேங்கிக்கிடப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

30 ஆண்டுகளாக பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 2018 ம் ஆண்டு 65,695 ஆக இருந்தது 2021 ஜனவரி புள்ளிவிவரப்படி அது 60 சதவீதம் உயர்ந்து 1,05,560 ஆக உள்ளது என்று மணிகண்ட்ரோல் வெளியிட்டிருக்கும் செய்தியில் கூறியுள்ளது.

முதன்மை விசாரணை நீதிமன்றங்கள் ஆண்டுக்கு 245 நாட்களை வேலை நாட்களாகக் கொண்டுள்ளது, உயர்நீதிமன்றங்கள் 210 நாட்களும், உச்ச நீதிமன்றம் 193 நாட்களும் ஓராண்டுக்கான வேலைநாட்களாக கொண்டுள்ளது.

இதில் உச்சநீதிமன்றத்திற்கு ஆண்டுக்கு ஐந்து முறை விடுமுறை அளிக்கப்படுகிறது, கோடை விடுமுறையாக 45 நாட்களும் குளிர்கால விடுமுறையாக 15 நாட்களும் ஹோலி பண்டிகையையொட்டி ஒரு வாரமும், தசரா மற்றும் தீபாவளிக்கு தலா 5 நாட்களும் விடுமுறை அளிக்கப்படுகிறது.

காடுகள் அழிப்பு, சுற்றுசூழல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை விசாரிக்கும் இந்த நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்புக்காக மட்டும் ஆண்டுக்கு 4.8 கோடி A4 பேப்பர்கள் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

வேலைவாய்ப்பில் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் கர்நாடக அரசின் சட்டத்தை எதிர்த்து போடப்பட்ட வழக்கில் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக தீர்ப்பளித்த உச்சநீதிமன்றத்தில் உள்ள 33 நீதிபதிகளில் இடஒதுக்கீடு சொல்லும்படியாக இல்லை,இங்கு ஒருவர் பட்டியலினத்தவராகவும் மேலும் ஒருவர் இதர பிற்பட்ட வகுப்பையும் சேர்ந்தவராக இருக்கிறார் என்பதே அதற்கு சாட்சியாக இருக்கிறது.

2018 ம் ஆண்டு நிதி ஆயோக் வெளியிட்ட அறிக்கையில் இந்திய நீதிமன்றங்களில் 2.9 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் இந்த வழக்குகளை விசாரித்து முடிக்க 324 ஆண்டுகள் ஆகும் என்றும் அப்போது தெரிவித்திருந்த நிலையில், தற்போது 4.4 கோடியாக உயர்ந்திருக்கும் நிலையில் புதிய இந்தியாவில் மேற்கொள்ளப்படும் டிஜிட்டல் மயமே இந்த வழக்குகள் விரைவில் தீர ஒரே வழி என்று நிபுணர்கள் கருதுகிறார்கள்.