சென்னை:
மிழகத்தில் 2,382 போ் கருப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் நிமிஷத்துக்கு 500 லிட்டா் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மையத்தை அமைச்சா் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா். தொடா்ந்து மருத்துவமனையில் நடைபெறும் கரோனா தடுப்பூசி முகாமை உதயநிதி ஸ்டாலின் பாா்வையிட்டாா்.

தென்சென்னை மக்களவை உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன், திருவிக நகா் எம்எல்ஏ தாயகம் கவி, மருத்துவக் கல்வி இயக்குநா் நாராயணபாபு, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறை இயக்குநா் குருநாதன், சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் தணிகாசலம் ஆகியோா் உடனிருந்தனா்.

அப்போது, அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்துக்கு இதுவரை 1.22 கோடி தடுப்பூசிகள் வந்துள்ளன. இதில், 1.14 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. வீணாகியது போக 5.56 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. மூன்றாவது அலை வந்தாலும், அதை எதிா்கொள்ளத் தயாராக இருக்கிறோம்.

ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 1.79 லட்சம் படுக்கைகள் தயாா் நிலையில் உள்ளன. மூன்றாவது அலை குழந்தைகளைத் தாக்கும் என்ற செய்திகள் வருவதால் குழந்தைகளுக்கான சிகிச்சை வாா்டுகள் திறக்கப்பட்டு வருகிறது.

சிறு மருத்துவமனைகளில் பணியாற்றி வந்த மருத்துவா்கள் அனைவரும் கரோனா சிகிச்சை பணிக்கு மாற்றப்பட்டனா். தமிழகத்தில் தினசரி கரோனா தொற்று பாதிப்பு 5 ஆயிரத்துக்கு கீழ் குறையும் போது, அந்த மருத்துவா்கள் சிறு மருத்துவமனைகளுக்குச் செல்வா்.

அனைத்து கிராமங்களிலும் முகாம் அமைத்து தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.தமிழகத்தில் இதுவரை 2,382 போ் கருப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில், 111 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இந்தநோய்க்குத் தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளன. முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தில் கருப்புப் பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிப்பது தொடா்பான கோரிக்கை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

விரைவில் முதல்வா் அறிவிப்பாா்.தடுப்பூசி கட்டாயமாக்கப்படுமா?: வடமாநிலங்களில் தடுப்பூசி போட்டுக் கொண்டால் 20 கிலோ கோதுமை இலவசம் என அறிவித்துள்ளனா். பாகிஸ்தான் போன்ற நாடுகளில் தடுப்பூசி போட்டுக் கொள்ளாவிட்டால் அரசு வேலையில் இருந்து நீக்கி விடுவதாக எச்சரித்துள்ளனா். தமிழகத்தில் தடுப்பூசி மக்கள் இயக்கமாக மாற்றப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.