சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக் கோரி ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மனு தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமிக்கு பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்தது.

எடப்பாடி பழனிச்சாமி கூட்டிய, அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், உச்சநீதிமன்றமும் அதை உறுதி செய்துள்ளது. இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில், அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரிக்கப் பட்டது.  விசாரணையின்போது, ஓ. பன்னீர்செல்வம் தரப்பில், உச்ச நீதிமன்ற தீர்ப்பு காரணமாக பேரவைக் கூட்டத்தில்கூட பங்கேற்க முடியாத நிலை உள்ளது. கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் ஒற்றைத் தலைமையை விரும்புவதாகக்கூற எந்த ஆதாரமும் இல்லை.

அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளர் நியமனம், கட்சி விதிகளுக்கு புறம்பானது. எனவே, எதிர்கட்சியிடம் விளக்கம் கேட்காமல், பொதுக் குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இதற்கு, எதிர்மனுதாரரிடம் விளக்கம் கேட்காமல் எப்படி உத்தரவு போட முடியும் என கேள்வி எழுப்பி நீதிபதிகள், ஓபிஎஸ் கோரிக்கையை நிராகரித்தனர்.  இந்த வழக்குத் தொடர்பாக பதிலளிக்க எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு மார்ச் 17 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.