சென்னை: சென்னை மாநகராட்சி தேர்தலில் பட்டியலினத்தவருக்கு கூடுதலாக வார்டுகளை ஒதுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சென்னை மாநகராட்சி தேர்தல் வரும் 19ந்தேதிர நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக ஏற்கனவே வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.  மொத்தமுள்ள 200 வார்டுகளில்,  பட்டியலின பெண்களுக்கு 16 இடங்களும், பொதுப்பிரிவு பெண்களுக்கு 84 வார்டுகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.  32 வார்டுகளில் 16 வார்டுகள் பட்டியலின பெண்களுக் கும், 16 வார்டுகள் பொதுப்பிரிவு பட்டியலின பெண்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த 16 ல் போட்டியிடும் ஒரு பட்டியலின பெண்ணே மேயர் ஆவார்.

இந்த நிலையில், இடஒதுக்கீடு கொள்கைப்படி, சென்னை மாநகராட்சியில் பட்டியலினத்தவருக்கு கூடுதலாக 4 வார்டுகளை ஒதுக்கக் கோரி எழும்பூரைச் சேர்ந்த, டாக்டர் அம்பேத்கர் இந்திய ஜனநாயக இயக்கத்தின் தலைவர் அம்பேத் வெங்கடேஷ்  உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், எதிர்வரும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில், சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள 200 வார்டுகளில் பட்டியலினத்தவர்களுக்கு பொதுப் பிரிவில் 16 வார்டுகளும், பட்டியலின பெண்களுக்கு 16 வார்டுகளும் என 32 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இட ஒதுக்கீடு கொள்கைப்படி, பட்டியலினத்தவர்களுக்கு 18 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். அதன்படி, மொத்தமுள்ள 200 வார்டுகளில் 36 வார்டுகளை பட்டியலினத்தவர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும். எனவே கூடுதலாக நான்கு வார்டுகளை பட்டியலினத்தவர்களுக்கு ஒதுக்கக் கோரி மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில்  விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், வார்டு மறுவரையறை குறித்து தாமதமாக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.தற்போதைய நிலையில்,  வார்டு மறுவரையறையில் நீதிமன்றம் தலையிட முடியாது. மேலும், தேர்தல் நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கி விட்டதால்  இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

‘https://patrikai.com/urban-local-body-election-chennai-corporation-wards-allocation-details/