கோவை:
பிரபல பாம்பே சர்க்கஸ் மீது கோவை போலீசார் மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

102 வருடங்களாக இந்தியா, தென் ஆப்பிரிக்கா, துபாய், பிரான்ஸ், இலங்கை என பல நாடுகளில் கொடிகட்டி பறந்து கோடி கணக்கான மக்களுக்கு பிடித்த சர்க்கஸ் நிகழ்ச்சியான ‘தி கிரேட் பாம்பே சர்க்கஸ்’ 7 வருடங்களுக்கு பிறகு கோயம்புத்தூரில் இப்போது நடைபெற்று கொண்டிருக்கிறது. ஜூன் 24ஆம் தேதி மிக பிரமாண்டமாக துவங்கிய இந்த நிகழ்ச்சியை பொதுமக்கள் பலரும் வெகுவாக கண்டு களித்தனர்.

கோவை மாநகரில் பலமுறை நிகழ்ச்சிகளை நடத்தி இங்கு மக்களின் ஆதரவை பெற்ற இந்நிறுவனம் கடைசியாக கடந்த 2017ம் ஆண்டு வ.உ.சி மைதானத்தில் சர்க்கஸ் நிகழ்ச்சியை நடத்தியது. இந்த நிலையில் 6 ஆண்டுகளுக்கு பிறகு கோவையில் தனது சாகச நிகழ்ச்சிகளை தொடங்கியுள்ளது பாம்பே சர்க்கஸ். முதல் நாளே சர்க்கஸிற்கு மக்கள் கொடுத்த பேராதரவு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

இந்நிலையில், சர்க்கஸில் பராமரிக்கப்படும் நாய்கள், கிளிகளுக்கு முறையாக உணவளிக்கவில்லை என ‘பீப்பிள் ஃபார் கேட்டல் இன் இந்தியா நிறுவனர் பாம்பே சர்க்கஸ் மீது புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் பாம்பே சர்க்கஸ் மீது கோவை காவல்துறை இந்திய தண்டனை சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் சர்க்கஸின் நிறுவனர், மேலாளர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.