திருவாரூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 300 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருவாரூர், வலங்கைமான், திரைத்துறைப்பூண்டி, மன்னார்குடி ஆகிய 3 இடங்களில் காவிரி உரிமை மீட்புக் குழுவினர் நேற்று காத்திருப்புப் போராட்டம் செய்தனர். திருவாரூர் ரயில் நிலையம் முன் அனுமதியின்றி காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 20 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே திரைத்துறைப்பூண்டி, வலங்கைமான், மன்னார்குடி ஆகிய இடங்களில் போராட்டம் செய்த 40 பெண்கள் உட்பட 290 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கு விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இதையடுத்து வழக்குகளை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழக அரசு தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக திருவாரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனிடையே தமிழகத்தில் ஏற்கனவே ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், நாகை, திருவாரூர், ராமநாதபுரம், புதுச்சேரி ஆகிய இடங்களிலும் புதிதாக ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.