கோவில் பணத்தில் வாங்கிய காரை பயன்படுத்தும் அமைச்சர் : உயர்நீதிமன்றத்தில் வழக்கு

Must read

சென்னை

கோவில் பணத்தில் வாகனங்கள் வாங்கி பயன்படுத்துவதாக அறநிலையத்துறை அமைச்சர்  மற்றும் ஆணையர் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குப் பதியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள பல கோவில்கள் இந்து அறநிலையத்துறை அமைச்சகத்தின் கீழ் நடைபெறுகிறது.    இதில் பெரிய  கோவில்களில் கிடைக்கும் பணத்தில் ரூ.10 கோடி தொகையில் 10000 கிராம சிறு கோவில்களைப் புனருத்தாரணம் செய்ய அரசு உத்தரவிட்டிருந்தது.   இதைத் தடை செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில்  மனு ஒன்று அளிக்கப்பட்டது.  இதையொட்டி கோவில் பணத்தை எந்த செலவுக்கும் பயன்படுத்த இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  இண்டிக் கலக்டிவ் டிரஸ்ட் என்னும் அமைப்பின் தலைவர் ரமேஷ் என்பவர் ஒரு பொது நல வழக்கை தொடர்ந்துள்ளார்.  அந்த வழக்கில் அவர் இந்து அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் ஆணையர் பயன்படுத்த மைலாப்பூர் கபாலீஸ்வரர் மற்றும்  மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் பணத்தில்  இருந்து வாங்கியதாகவும் அதற்கான எரிபொருள் செலவும் கோவில் பணத்தில் நடைபெறுவதாகவும் குற்றம் சாட்டி இருந்தார்.

மேலும் இந்த வழக்கு மனுவில் கோவில் பணத்தின் மூலம் இந்து அறநிலையத்துறை அதிகாரிகளின் அலுவலகத்துக்குக் கணினிகள் வாங்கியதையும் அலுவலகத்தைப் புதுப்பித்ததையும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.   அத்துடன் அரசு இந்த பணத்தில் ஒரு டெலிவிஷன் சேனல் ஒன்றைத் தொடங்க திட்டமிட்டிருந்ததையும் குறிப்பிட்டிருந்தது.

கடந்த 2011 முதல் மாநிலத்தில் உள்ள 19000  கோவில்களில் அறங்காவலர் நியமனம் செய்யப்படாமல் உள்ளது.  இந்தக் கோவில்களின் மூலம் கிடைக்கும் பணம் அறநிலையத்துறை விதிகளுக்குப் புறம்பாக பயன்படுத்துவதாகவும் அவற்றை மற்ற பணிகளுக்கு மாற்றக் கூடாது என தடைவிதிக்குமாறும் மனுவில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரிக்க நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா ஆகியோரின் அமர்வு நியமிக்கப்பட்டுள்ளது.   இது குறித்து தமிழக அரசுக்கும் இந்து அறநிலையத்துறை ஆணையருக்கும் விளக்கம் அளிக்குமாறு அமர்வு உத்தரவிட்டுள்ளது.

More articles

Latest article