சென்னை,
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் அசாதரண சூழலில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக ஆவேச மாக பேசி வருபவர் ‘நாசா’ என அழைக்கப்படும் ‘இன்னோவா’ நாஞ்சில் சம்பத்.
அதிமுகவின் ஒபிஎஸ், இபிஎஸ் அணிகளை இணைந்து, சசிகலா, டிடிவி தினகரனை கட்சியில் இருந்து நீக்க முடிவெடுத்துள்ளதால், அதுகுறித்து தனது கருத்துக்களை ஆவேசமாக பேசி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் நாஞ்சில் சம்பத்.
தீவிர டிடிவி ஆதரவாளரான நாஞ்சில் சம்பத், அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தது முதல் தினகரன் தரப்புக்கு ஆதரவாக வெறிகொண்டு தீவிரமாக பேசி வருகிறார்.
சமீபத்தில் நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏ, எம்பிக்கள் கூட்டத்திற்கு பின்னர் பேட்டி அளித்த நாஞ்சில் சம்பத் பாஜக தலைமையை கடுமையாக விமர்சித்தார்.
இதன் கோபமடைந்த பாரதியஜனதாவினர், நேற்று மாலை பட்டினப்பாக்கத்தில் உள்ள நாஞ்சில் சம்பத் இல்லத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அதைத்தொடர்ந்து, அந்த பகுதியில் உள்ள தனியார் உணவு விடுதிக்கு உணவருந்த சென்ற நாஞ்சில் சம்பத்தை முற்றுகையிட்டு தாக்க முயற்சித்தனர். அவரது இன்னோவா காரின் காற்றை பிடுங்கிவிட்டனர்.
இதையறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, பா.ஜ.கவினரை விரட்டியடித்து, நாஞ்சில் சம்பத்தை மீட்டு வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
அதைத்தொடர்ந்து பாஜகவின் திருவள்ளுவர் மேற்கு மாவட்ட தலைவர் லோகநாதன் என்பவர் நாஞ்சில் சம்பத்மீது பட்டினம்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் பட்டினப்பாக்கம் போலீசார் நாஞ்சில் சம்பத் மீது 354 (அவதூறாக பேசுவது) 499 (பொது வெளியில் அவதூறாக பேசுவது , பேட்டி அளிப்பது) ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையில், நாஞ்சில் சம்பத் மீது மேலும் பல காவல் நிலையங்களில் பாஜகவினர் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர்.
பா.ஜ.கவின் தொடர் புகார் காரணமாக போலீசார் நாஞ்சில் சம்பத்தை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நாஞ்சில் சம்பத் வீட்டை சுற்றி வளைத்ததோடு, அவரது கார் டயரின் காற்றை பிடுங்கிவிட்டு, அவரை சுற்றி வளைத்து சிறைப்படுத்தி தாக்க முயற்சித்த பாஜகவினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.