ரிஷிகேஷ்

கொரோனா விதிகளை மீறி தனது பிறந்த நாளை கொண்டாட வந்த பாஜக மக்களவை உறுப்பினர் சாக்‌ஷி மகராஜ் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

நாடெங்கும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.   இதையொட்டி ஒவ்வொரு மாநிலங்களிலும் கடும் கட்டுப்பாடு விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  மக்கள் ஒரே இடத்தில் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது.   இவ்வாறு கூடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

உத்தரகாண்ட் மாவட்டத்தில் உள்ள ரிஷிகேஷ் நகரில் ரயில்வே சாலையில் பகவான் பவன் என்னும் ஆசிரமம் உள்ளது.   அங்கு உன்னாவ் தொகுதி மக்களவை உறுப்பினரும் பாஜக பிரமுகருமான சாக்‌ஷி மகராஜ் தனது பிறந்த நாளைக் கொண்டாட ஏற்பாடு செய்திருந்தார்.  இதை ஒட்டி அவர் ஆசிரமம் வந்தார்.

அப்போது சாக்‌ஷி மகராஜின் ஆதரவாளர்கள் 50க்கும் அதிகமானோர் அங்கு கூடினர்.   தற்போது டேராடூன் நகரில் கடும் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன.  எனவே கட்டுப்பாடுகளை மீறிய சாக்‌ஷி மகராஜ் மீது துணை ஆட்சியர் அபூர்வா பாண்டே புகார் அளித்துள்ளார்.  இந்த புகாரின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் சாக்‌ஷி மகராஜ் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.